வேடசந்தூர் திமுக இளைஞரணி நகர அமைப்பாளரை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ வெளியிட்டவர் பாஜக நிர்வாகி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக இளைஞரணி நகர அமைப்பாளர் ஜெகன் இவருக்கும் இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் ரஞ்சித்குமார் என்பவருக்கும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இட பிரச்சனை சம்பந்தமாக வாய் தகராறு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டு பின்னர் இரு தரப்பினரும் சமரசமானார்கள்.
இந்நிலையில் ரஞ்சித்குமார் அவரது மனைவி ஆகியோரை திமுக இளைஞரணி நகர அமைப்பாளர் ஜெகன் தாக்குவது போல் பழைய வீடியோவை தற்போது சம்பவம் நடந்தது போலவும், வேடசந்தூர் திமுக ஒன்றிய செயலாளர் படத்துடன் திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்த பாஜக பிரமுகர் பாரதி கண்ணன் என்பவர் தனது சமூக வலைதள பக்கங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் வேண்டுமென்றே வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பாஜக பிரமுகர் எங்களைப் பற்றி அவதூறு வீடியோ வெளியிட்டதால் எங்கள் குடும்பமே ஊரில் நடமாட முடியாத நிலையில் மன உளைச்சலோடு உள்ளோம். சமூக வலைதளங்களில் உள்ள வீடியோ காட்சியை உடனடியாக அகற்றி வீடியோவை வெளியிட்ட பாஜக பிரமுகர் பாரதி கண்ணன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் ரஞ்சித்குமார் புகார் செய்தார்.
இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ரஞ்சித்குமார் செய்தியாளரிடம் கூறியதாவது: வேண்டுமென்றே சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் காரணமாக பாஜக பிரமுகர் நாங்கள் சமரசமான பழைய சம்பவத்தை சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை அவர் உடனடியாக நீக்க வேண்டும். பாரதி கண்ணன் மீது போலீசில் புகார் செய்துள்ளேன். போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன். என்றார்.



