• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சென்னையில் பிரபல உணவகம் மீது புகார்

Byவிஷா

Apr 2, 2025

சென்னையில் பிரபலமாக இருக்கும் பிலால் உணவகத்தில் கெட்டுப் போன உணவருந்திய 20பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணாசாலையில் மவுண்ட் ரோடு பிலால் என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இது மிகவும் பிரபலம். இங்குள்ள பன் மற்றும் ஆப்பம் பாயாவுக்கு என ஏராளமானோர் வந்து உணவு அருந்துவர். மேலும், இந்த நிறவனத்துக்கு சென்னை திருவல்லிக்கேணி பகுதியிலும் ஒரு பிராஞ்ச் உள்ளது.
பிரபலமான இந்த உணவகத்தில் ரம்ஜான் அன்று, அதாவது மார்ச் 30 ஆம் தேதி சகோதரிகளான 2 கல்லூரி மாணவிகள் குடும்பத்தினருடன் வந்து உணவருந்தி உள்ளனர். இவர்கள் இருவரும் மட்டன் குழம்பு சாப்பிட்டதாகவும் அதற்கு பிறகு இவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுதொடர்பாக ராயப்பேட்டை மருத்துவமனை தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ராயப்பேட்டை போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதே போல் திருவல்லிக்கேணி பகுதியில் ஹோட்டல் பிலால் பிரியாணி பிராஞ்சில் ரம்ஜானுக்கு முதல் நாள் இங்கு பீப் சாப்பிட்ட 18 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அருகே உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. இதில் சிலருக்கு தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால், அவர்கள் தண்டையார்பேட்டை காலரா மருத்துவ மனையிலும், திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் திருவல்லிக்கேணியில் செயல்படும் பிலால் பிரியாணி என்ற ஓட்டல் முன்பு திரண்டு முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட வந்தனர். ஆனால் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சட்ட ரீதியாக புகார் அளிக்குமாறு அவர்கள் கூறியதை அடுத்து தற்போது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட 18 பேரின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
சஸ்மா, சமீரா ஆகிய இருவர் அண்ணா சாலை ஓட்டலில் சாப்பிட்டதால் வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விக்னேஷ், ரபேக்கா உள்பட 6 பேருக்கு திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டலில் சாப்பிட்ட பிறகு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் காலரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் திருவல்லிக்கேணி ஓட்டலில் ஷவர்மா சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது. அவர்கள் 8 பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மற்றும் கல்லூரி மாணவர்கள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக திருவல்லிக்கேணி மற்றும் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது சம்மந்தப்பட்ட இரு ஹோட்டல்களிலும் உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை நடத்துவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.