• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

வேட்பாளர்களின் முகங்களுடன் ‘கலர்புல் சாக்லேட்டுகள்’

Byவிஷா

Mar 28, 2024

நாடு முழுவதும் வேட்பாளர்களின் முகங்களுடன் வெவ்வேறு வண்ணங்களில் சாக்லேட்டுகள் விற்பனையாகி வருவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில், நாடு முழுவதும் உள்ள பிரபல அரசியல் கட்சியினர் குவிந்து வருகின்றனர். வேட்பாளர்களின் ஒளிரும் முகங்களைக் கொண்ட அழகழகான வண்ண ரேப்பர்களில் சாக்லேட்டுகளை தயார் செய்து தருகிறார் கதீஜா. இந்த தேர்தல் காலத்தின் புதிய சுவையை அனுபவியுங்கள் என்கிற கோழிக்கோட்டைச் சேர்ந்த தொழிலதிபரான அஷீகா கதீஜாவின் தயாரிப்பு வேட்பாளர்களை வசீகரித்துள்ளது.
பிரத்யேகமாக வேட்பாளர்களின் உருவத்துடனும், கட்சி சின்னத்துடனும் தயாரிக்கப்படுகிற இந்த சாக்லேட் கவர்களுக்காக பிரதான அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன. வேட்பாளர்களிடமிருந்து மொத்த ஆர்டர்களைப் பெற்று, வண்ண ரேப்பரில் வேட்பாளர் பெயர் மற்றும் தேர்தல் சின்னம் அச்சிடப்பட்ட சாக்லேட்டுகளுக்கான ஆர்டர்களும் தெலுங்கானா, அசாம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து குவிந்து வருகின்றன. தமிழக வேட்பாளர்கள் இன்னும் இந்த சாக்லேட் கோதாவில் இறங்கவில்லை.
கோழிக்கோடு முக்கம் அருகே உள்ள காரசேரியைச் சேர்ந்த சாக்லேட் தயாரிப்பாளர் ஆஷிகா, விருந்துகள், கொண்டாட்டங்கள், விசேஷ நிகழ்வுகளுக்கான சாக்லேட்டுகள் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்.
வடகரை நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளர் ஷாபி பரம்பிலுக்கு முதல் முறையாக இப்படியான சாக்லேட்களைத் தயாரித்திருந்தது வாக்காளர்களிடையே பெரும் கவனம் பெற்றது.
ஷாபியின் புன்னகை ததும்பும் புகைப்படம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னம் அடங்கிய சாக்லேட்டை வாக்காளர்களுக்கு வழங்கினார். இதனைத் தொடக்கமாக வைத்து, பிற வேட்பாளர்களின் படத்துடன் கூடிய சாக்லேட்கள் வலம் வந்து நகரம் முழுவதும் பேசப்பட்டது.
பின்னர், கோட்டயத்தைச் சேர்ந்த வேட்பாளர் துஷார் வெள்ளப்பள்ளியிடம் இருந்து ஆஷீகாவுக்கு ஆர்டர் கிடைத்தது. ஆலப்புழாவில் போட்டியிடும் கே.சி.வேணுகோபாலும் தனது பெயர் மற்றும் புகைப்படத்துடன் கூடிய ரோச்சிஸ் சாக்லேட்டுகளுக்காக ஆர்டர் கொடுத்திருக்கிறார்.
“சமீபத்தில் தெலுங்கானாவில் 10 வேட்பாளர்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை வழிநடத்தும் குழுவினரிடம் இருந்து மொத்தமாக ஆர்டர் கிடைத்துள்ளதாக தெரிவித்தார் கதிஜா. தேர்தல் பிரச்சாரங்களுக்காக ரூ.25க்கு ஒரு சாக்லேட் வீதம் தயாரித்து வருகிறார். வெவ்வேறு அளவுகள் மற்றும் வடிவங்களில் வேட்பாளர்களின் தேவைக்கேற்ப தயாரித்து தருகிறார்.
மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜியில் (எம்.எல்.டி) பட்டம் பெற்றிருந்தாலும், ஆஷிகாவின் சாக்லேட் காதல் அவரை இந்தத் தொழிலுக்கு அழைத்து வந்துள்ளது. “நான் ஒரு சாக்லேட் பிரியை. அப்படித்தான் நான் சாக்லேட் தயாரிப்பில் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன், படிப்படியாக இந்த உற்சாகம் ஒரு வணிகத்திற்கு வழிவகுத்தது” என்கிறார் ஆஷிகா. “எங்களுடையது வித்தியாசமான வணிகம். ஆர்டரை உறுதிசெய்த பிறகே நாங்கள் தயாரிப்பைச் செய்கிறோம், அவற்றில் பெரும்பாலானவை தனிப்பட்ட பயன்களுக்கானவை. மும்பை, டெல்லி, ஹைதராபாத், ராஜஸ்தான், காஷ்மீர் போன்று பல இடங்களில் இருந்து நாங்கள் ஆர்டர்களைப் பெறுகிறோம். எங்களுக்கு ஆர்டர் கிடைத்ததும். தில்லி செயலகத்திலும், பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்புவதற்கான சாக்லேட்களையும் தயாரித்துள்ளோம்” என்கிறார்.