• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சென்னையில் வன்முறையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்..!

Byவிஷா

May 16, 2022

சென்னை பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த இரு பிரிவு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள ஹாரிங்டன் சாலையில், அக்கல்லூரியின் இரு பிரிவு மாணவர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கற்களாலும், கைகளாலும் ஒருவரை ஒருவர் திடீரென தாக்கிக் கொண்டனர். இதுதொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்துள்ளனர். அதே நேரத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரி நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களும் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றனர்.
காவல்துறையினர் சுற்றி வளைப்பதை அறிந்த மாணவர்கள், அங்கிருந்து சிதறி ஓடினர். இதில் கல்லால் தாக்கியதில் ஒரு மாணவனுக்கு படுகாயம் ஏற்பட்டது. மேலும் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், பூந்தமல்லியில் இருந்து வரும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், திருத்தணியில் இருந்து வரும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. பூந்தமல்லியில் இருந்து வருபவர்கள் பேருந்து மூலமாகவும், திருத்தணியில் இருந்து வருபவர்கள் ரயில் மூலமாகவும் கல்லூரிக்கு வரும் மாணவர்களிடையே எதற்காக மோதல் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மோதலில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல், சிசிடிவி மற்றும் காவல் துறை எடுத்த வீடியோ பதிவுகளில் உள்ளதால், மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் பட்டியலை தயாரித்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி மதில் சுவர் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் பின்புறம் 8 பட்டாக்கத்திகளையும், பல காலி மது பாட்டில்களையும் தாக்குதல் நடத்துவதற்காக மாணவர்கள் பதுக்கி வைத்திருந்தது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களை பிடிக்க முற்பட்டபோது, அவர்கள் வீசி எறிந்த கல்லூரி பைகளில், கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்ததையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனே சென்றதால் மாணவர்களிடையே பெரும் மோதல் தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் பட்டியல் கல்லூரி நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலமுறை இது போன்ற சம்பவங்களில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டபோது அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு போலீசார் எச்சரித்து அனுப்புவது வழக்கம். இந்த முறை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இனிமேல் இது போன்ற செயலில் ஈடுபடாத வண்ணம் கடுமையான சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சிக்கும் மாணவர்களில், தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட மாணவர்கள் இருந்தால், அந்த மாணவர்கள் மீது சரித்திரப் பதிவேடு உருவாக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மோதலையடுத்து கல்லூரியின் அனைத்து நுழைவு வாயில்களிலும் மாணவர்கள், காவல்துறை மற்றும் கல்லூரி நிர்வாகத்தால் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். கல்லூரி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள சந்திப்புகளிலும், காவல்துறையினர் மாணவர்களை சோதனை செய்து அனுப்பியுள்ளனர். கடந்தாண்டு ஜூன் மாதத்திலிருந்து இதுபோன்று செயல்களில் ஈடுபட்ட மாணவர்களில் 28 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.