மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளபட்டியைச் சேர்ந்த ஜெயபாண்டி, சிவநேஷ் என்ற இருவரும் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு பயின்று வருகின்றனர்.

இன்று வழக்கம் போல இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த போது கல்லூரி முன்பு மதுரையிலிருந்து தேனி நோக்கி சென்ற தனியார் பேருந்து மாணவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்களான ஜெயபாண்டி, சிவநேஷ் என்ற இருவரும் படுகாயமடைந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் ஜெயபாண்டி சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த சிவநேஷ் க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர் ஜெயபாண்டி உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுநர் சாதூர் சுந்தர் சிங் – யை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.








