விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள துலுக்கன்குறிச்சியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் 232 புதிய குடியிருப்புகள் பன்னிரண்டு கோடியே 19 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளன. அதற்கான திறப்பு விழா நடைபெற உள்ளது. முன்னேற்பாடுகளை புதிய கலெக்டர் சுக புத்ரா நேரில் பார்வையிட்டார். கட்டப்பட்ட வீடுகளை பார்வையிட்டு குடிநீர் வசதி, வாறுகால் வசதி, தெருவிளக்கு வசதிகள், சாலை வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார். தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் மழை பெய்தால் மழை நீர் சேகரிக்க ஏதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என கேட்டார். அதற்கு அதிகாரிகள் மழை நீரை சேகரிக்க செய்யப்பட்ட பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர். பின்னர் கலெக்டர் குடியிருப்பில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் யாரும் வந்துள்ளார்களா என கேட்டார். ஆறு பயனாளிகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது .அந்த பயனாளிகளிடம் கலெக்டர் உறையாடினார்.

கட்டிடப் பணிகள் உங்களுக்கு திருப்தியாக உள்ளதா, நீங்கள் எதிர்பார்த்தவாறு பணிகள் நடைபெற்றுள்ளதா என கேட்டார். சம்பந்தப்பட்ட பயனாளிகள் அடிப்படை வசதிகள் எதிர்பார்ததை விட சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடித்ததற்கு தமிழக அரசிற்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கலெக்டரிடம் தெரிவித்தனர். ஆய்வின்போது மாவட்ட திட்ட இயக்குனர் தண்டபாணி, வெம்பக்கோட்டை தாசில்தார் கலைவாணி, வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பொறியாளர் முத்துக்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
