திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து ஆய்வு மைதானத்தில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து துறை, காவல் துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு இன்று நடைபெற்றது.

தமிழகத்தில் தற்பொழுது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது அடுத்த மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல், நத்தம், வேடசந்தூர், வத்தலகுண்டு, வட்டாரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான மெட்ரிக்குலேஷன், சிபிஎஸ்சி மற்றும் பள்ளிகளில் 668 வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பள்ளி வாகனத்தில் உள்ள படிக்கட்டுகள், கதவுகள், ஜன்னல்கள், அவசரகால வழி, இருக்கைகள், வேகக் கட்டுப்பாட்டு கருவி, தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி, சிசி டிவி கேமரா ஆகியவை முறையாக உள்ளதா எனவும் மேலும் வண்டியின் முன்பக்கம் மற்றும் பின்பக்கம் சிசிடி கேமரா என 23 விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா என மாவட்ட ஆட்சியர் சரவணன், வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மகேஷ், தீயணைப்புத்துறை நிலைய ஆய்வாளர் மயில்ராஜ் ஆகியோர் பள்ளி வாகனங்களை சோதனை செய்தனர்.
இதில் விதிமுறைகள் சரியாக இல்லாத வாகனங்களுக்கு கால அவகாசம் வழங்கி குறைபாடுகளை நிவர்த்தி செய்து மீண்டும் வந்து சோதனை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளி வாகன உரிமம் புதுப்பிக்காமல் இருந்தால் உடனடியாக புதுப்பிக்க உத்தரவு பிறப்பித்தனர். இந்த நிகழ்வில், வாகனத்தில் பயன்படுத்தக்கூடிய தீயணைப்பு கருவிகளை முறையாக செயல்படுத்த வேண்டும் என்பதை செய்முறை விளக்கம் அளித்து காண்பித்தனர். மேலும் 108 வாகனத்தில் திண்டுக்கல் ஒருங்கிணைப்பாளர் பள்ளி பேருந்துகளில் முதலுதவி பெட்டிகளை ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் கூறும்போது :
“பள்ளி வாகனங்கள் தவிர்த்து தனியார் வாகனங்களில் பள்ளி குழந்தைகள் அழைத்து வரும் நிலையில் அது குறித்த வாகனங்களும் சோதனை செய்யப்படும். மேலும் பள்ளி விடும் நேரங்களில் அதிகளவு அரசு பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மற்றும் ஆட்டோக்களில் குழந்தைகள் அழைத்து வரும் பட்சத்தில் அது குறித்தும் சோதனைகள் செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.