• Mon. Apr 29th, 2024

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு கணினி மூலம் தேர்தல் பணியினை தொடங்கி வைத்தார் கலெக்டர் க.கற்பகம்

Byதி.ஜீவா

Mar 21, 2024

வாக்குப்பதிவு நாளில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான கணினி வாயிலாக தேர்தல் பணி ஒதுக்கீடு (RANDAMIZATION) செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் க.கற்பகம் இன்று (21.03.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவில் தொடங்கிவைத்தார்.
நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 147.பெரம்பலூர்(தனி), 148.குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 332 வாக்குச்சாவடி மையங்களும், குன்னம் சட்டமன்றத்தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்களும் உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு கணினி முறையில் இன்று பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர் 1, வாக்குப்பதிவு அலுவலர் 2, வாக்குப்பதிவு அலுவலர் 3 ஆகியோர் பணி நியமனம் செய்யப்படுவர். 1200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு அலுவலர் ஒருவர் கூடுதலாக நியமிக்கப்படுவர். அதனடிப்படையில், பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 652 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் என மொத்தம் 3,201 அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு கணினி மூலம் தயார் செய்யப்பட்டு ஆணை இன்று வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கான பயிற்சி வகுப்பு 24.03.2024 அன்று நடைபெறவுள்ளது. பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் பள்ளியிலும், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, பெரம்பலூர் சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி க.இரமேஷ், சார் ஆட்சியர் திரு.சு.கோகுல்மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் வைத்தியநாதன்(பொது), விஜயா(தேர்தல்), தேர்தல் பிரிவு வட்டாட்சியர்கள் சிவா, அருளானந்தம் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *