தஞ்சாவூர் மாவட்டம் இரயில் நிலையம் தலைப்பு பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் ஏற்றி அனுப்பும் பணிகள் மற்றும் ஓரத்தநாடு வட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் ஓரத்தநாடு வட்டத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் குறித்து மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து, ஒரத்தநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் பொது விநியோக திட்ட அங்காடி கட்டிட கட்டுமானப் பணிகளையும், ஒரத்தநாடு வட்டம் தென்னமநாடு ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிட கட்டுமானப் பணிகளையும், பொது விநியோக திட்ட அங்காடி கட்டிட கட்டுமானப் பணிகளையும், ஒரத்தநாடு வட்டம் ஈச்சங்கோட்டை ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பணிகள், மண்புழு உரம் தயாரித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் மரங்கன்று உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருவதையும், உயர்நிலை நீர்த்தொட்டி தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தலைமை அலுவலகம் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொது மேலாளர் (சந்தை) முத்துராமலிங்கம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக முதுநிலை மண்டல மேலாளர் செல்வம், துணை மேலாளர் (கொள்முதல் மற்றும் இயக்கம்) இளங்கோ, ஒரத்தநாடு வட்டாட்சியர் யுவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
