நாகப்பட்டினம் மற்றும் கீழையூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.10.2025) ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் தேமங்கலம் ஊராட்சி சிராங்குடி புலியூர் கிராமம் மற்றும் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் ஆய்மூர் ஊராட்சி, ஈசனூர் ஊராட்சி ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வது, கொள்முதல் செய்யப்படுகின்ற நெல்லின் ஈரப்பதம், தரம், நெல் மூட்டைகளின் எடை போன்றவைகளைவைகளையும், விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்கு மற்றும் ஆலைகளுக்கும் தாமதமின்றி எடுத்துச் செல்லும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் காரீப் 2025-2026 ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் தற்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக 124 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை 56,729 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இதுவரையில் 36,852 மெ.டன் நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு இயக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதில் 9,671 விவசாயிகளுக்கு ரூ.125.09 கோடி தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு குறுவை பருவத்திற்கு 23 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டு, சுமார் 5,440 மெ.டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு இந்நாள் வரையில் 124 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது.
மேலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3,493 மெ.டன் அளவிற்கு மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் நேற்றைய தினம் (14.10.2025) ஒரே நாளில் 3,509 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 16 மடங்கு அளவிற்கு கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

மேலும், அதிகமாக நெல் வரத்துடைய 3 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 2 நெல் தூற்றும் இயந்திரங்கள் உள்ளன. விவசாயிகளை காத்திருக்க வைக்காமல், நெல் மூட்டைகளை விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு கொள்முதல் நிலைய பணியாளர்;கள் பணமாகவோ, கூடுதலாக நெல்லாகவோ பெறுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொடர்ந்து, விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து அவர்களது குறைகளை நிறைவேற்ற உரிய அலுவலருக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் திருமதி.அ.சிவப்பிரியா, வேளாண்மை துறை இணை இயக்குநர் திரு.எஸ்.கண்ணன், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.