

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்தூர் கிராமத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான கதலிநரசிங்க பெருமாள்கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரைவடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஏப்ரல் 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில் முதல் ஒருவாரம் கதலிநரசிங்கபெருமாள் அன்னவாகனம், சிம்மவாகனம், ஆஞ்நேயவாகனம், கருட, ஆதிசேசன் வாகனம், கஜேந்திரவாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் அன்றிலிருந்து மண்டகபடி பூஜைகளும் நாள்தோறும் சுவாமிக்கு நடைபெற்று வந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் உற்சவர்கள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் தேரில் எழுந்தருளினர். நேற்று மாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் உற்சவர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
இதனையடுத்து 18 கிராம முக்கிய பிரதிநிதிகளுக்கு மாலை மரியாதை செய்யப்பட்டது. பக்தர்கள் திரளாக கூடி ” கோவிந்தா, கோவிந்தா ” என விண்ணை முட்டும் அளவிற்கு கோஷங்களை எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரில் உற்சவ மூர்த்திகள் ஆடி , அசைந்து பவனி வந்தது, காண்போரின் கண்களுக்கு கண் கொள்ளா காட்சியாக அமைந்தது. தேர் கோவிலை சுற்றி வந்து வடக்கு தெருவில் நின்றது. இத்திருவிழாவில் பல பகுதிகளிலிருந்தும் வந்து பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
இதில் பக்தர்கள் முடிக்காணிக்கை, தீசட்டி, மாவிளக்கு , முளைப்பாரி உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் தங்க லதா தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

