• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சித்திரை திருவிழா முன்னேற்பாட்டு பணிகள்..,

ByKalamegam Viswanathan

Apr 19, 2025

சித்திரை திருவிழா 2025 அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவில் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகள், நான்கு மாசி வீதிகள் மற்றும் கள்ளழகர் எழுந்தருளும் ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து, ஆணையாளர் சித்ரா விஜயன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

மதுரை மாநகரில் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2025 ஆம் ஆண்டு நடைபெறும் சித்திரை திருவிழாவினை சிறப்பாக நடத்திட மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொண்டு வருகிறது.

மதுரை சித்திரை திருவிழா எதிர்வரும் 28.04.2025 முதல் 17.05.2025 வரை நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வுகளான தினந்தோறும் அருள்மிகு மீனாட்சியம்மன் நான்கு மாசி வீதிகளில் வீதியுலா வருதல், அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், திக்குவிஜயம், தேரோட்டம், கள்ளழகர் எதிர்சேவை மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற உள்ளது. சுவாமி தரிசனம் மேற்கொள்வதற்கும், திருவிழாவினை காண்பதற்கும் மதுரை மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டம், இதர மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பலர் கலந்து கொள்வார்கள்.

அதன்படி , மதுரை மாநகருக்கு அருள்மிகு கள்ளழகர் அழகர்கோவில் மலையிலிருந்து புறப்பட்டு மதுரை மாநகருக்கு வருகை தரும் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளான அழகர்கோவில் மெயின் ரோடு, கடச்சனேந்தல், மூன்று மாவடி, சர்வேயர் காலனி, புதூர் மற்றும் தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகள், அருள்மிகு கள்ளழகர் எழுந்தருளும் ஆழ்வார்புரம் வைகை ஆற்றுப் பகுதிகள், அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவில் சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகள், தேர் வீதியுலா வரும் நான்கு மாசி வீதிகள் உள்ளிட்ட சித்திரை திருவிழா நடைபெறும்.

முக்கிய இடங்களில் மாநகராட்சியின் சார்பில் குடிநீர் சின்டெக்ஸ் தொட்டிகள் வைத்தல், நிரந்தர மற்றும் தற்காலிக கழிப்பறை வசதிகள், மின்விளக்கு பொருத்துதல், சாலைகள் சீரமைத்தல், தூய்மைப்பணிகள், மரத்தடுப்புகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்வது குறித்து ஆணையாளர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில், கண்காணிப்பு பொறியாளர் முகம்மது சபியுல்லா, துணை ஆணையாளர் ஜெய்னுலாபுதீன், நகர்நல அலுவலர் மரு.இந்திரா, செயற்பொறியாளர் (குடிநீர்) பாக்கிய லெட்சுமி, உதவி செயற்பொறியாளர்கள் முத்து, காமராஜ், ஆரோக்கிய
சேவியர், மயிலேறிநாதன், உதவிப் பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.