• Fri. Oct 17th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

இந்தியா கூட்டணி குறித்து ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார் – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

Byகதிரவன்

Apr 6, 2024

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் கருப்பையாவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி…

இந்தியா கூட்டணி குறித்து ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் பேசி வருகிறார்.

இந்தியா கூட்டணியில் ஒருங்கிணைப்பு இல்லை. தேர்தல் நேரத்திலேயே ஒருங்கிணைப்பு இல்லாதவர்கள் எப்படி பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள்.

இந்தியா கூட்டணியில் ஸ்டாலின் சேரவில்லை என்றால் அந்த கூட்டணி வலுவாக இருந்திருக்கும். அவர் சேர்ந்ததால் இந்தியா கூட்டணியில் இருந்த கட்சிகள் ஒவ்வொன்றாக விலகி போய்க் கொண்டிருக்கின்றன. அவர் ராசி அப்படிப்பட்ட ராசி.

ஸ்டாலின் மீது மக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது. அதன் காரணமாக அவர் இந்தியா கூட்டணி என்கிற போர்வையை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்தியா கூட்டணி மட்டும் இல்லை என்றால் அவர் டெபாசிட் கூட வாங்க மாட்டார்.

அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலகி விட்டது. இருந்த போதும் ஸ்டாலின், பாஜகவுடன் அதிமுக கள்ளக் கூட்டணியில் இருப்பதாக கூறி வருகிறார்.
அதிமுகவினருக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை. எங்களுக்கு தேவை என்றால் நாங்கள் நேரடியாக கூட்டணி வைத்துக் கொள்வோம்.

ஆட்சி அதிகாரம் தான் எங்களுக்கு முக்கியம் என்றால் நாங்கள் பாஜகவோடு கூட்டணி வைத்திருப்போம். ஆனால் எங்களுக்கு மக்கள் நலன் தான் முக்கியம். அதன்படி தான் செயல்படுகிறோம்.

திமுக ஒரு கட்சியல்ல. அது கார்ப்பரேட் கம்பெனி. ஆனால் அதிமுக, மக்களுக்கு நன்மை செய்ய உருவாக்கப்பட்ட கட்சி.

அதிமுகவை யாராலும் அசைக்க முடியவில்லை. இந்த கட்சியை உடைக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டது. அதை தகர்த்து எறிந்த கட்சி அதிமுக. சில எட்டப்பர்கள் இந்த கட்சியில் இருந்தார்கள் சின்னத்தை முடக்க வேண்டும் என்று திமுகவோடு சேர்ந்து நமக்கு பல தொல்லைகள் கொடுத்தார்கள். அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.

2ஜி ஊழலில் ஒரு லட்சத்து 22 ஆயிரம் கோடி ஊழல் செய்து தமிழ்நாட்டை தலைகுனிய வைத்த கட்சி திமுக. ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசாங்கம் திமுக அரசாங்கம் தான்.

காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளோடு மாறி மாறி கூட்டணி வைத்துக்கொண்டு 14 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் இருந்த திமுக தமிழ்நாட்டிற்கு என்ன நன்மை செய்துள்ளது?

அதிமுக 10 ஆண்டுகாலம் பொற்கால ஆட்சியை கொடுத்தது. ஆனால் மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கு என்ன நன்மை செய்தது என மக்கள் கேள்வி கேட்கிறார்கள். ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு செல்லும் போது மக்கள் அவர்களை பார்த்து கேள்வி கேட்கிறார்கள்.

மூன்று ஆண்டு காலத்தில் மூன்றரை லட்சம் கோடி மக்கள் மீது கடன் வாங்கி சுமத்தியுள்ளார்கள். ஆனால் எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை.

அதிமுக ஆட்சியில் ஒரு வருடத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டது ஆறு சட்டக் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டது. சாதனை மேல் சாதனை படைத்து சாதனைக்கு சொந்தக்கார அரசாக அதிமுக அரசு இருந்தது.

2ஜி ஊழல் காரணமாக மத்திய அமைச்சராக இருந்த ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

மத்தியில் ஆட்சியில் அமர்ந்தால் பல லட்சம் கோடி கொள்ளை அடிக்கலாம் என்பதுதான் ஸ்டாலின் திட்டம். ஸ்டாலின் காணும் கனவு பகல் கனவு அதிமுக வேட்பாளர்களை தான் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். தமிழ்நாட்டில் விலைவாசி உள்ளிட்டவை கடுமையாக உயர்ந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் பல லட்சம் பெண்கள் பயன்பெற்றார்கள். அந்தத் திட்டத்தை திமுக அரசு ரத்து செய்து விட்டது. ஏழை, எளியவருக்கான திட்டத்தை கூட நிறுத்தி தமிழகத்தை சீரழித்து விட்ட அரசு தி.மு.க அரசு மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்கும் திட்டமும் நிறுத்தப்பட்டுள்ளது. ஏழை எளிய மாணவர்களின் கனவை சிதைத்த அரசாங்கம் திமுக அரசாங்கம்.

மடிக்கணினி கிடைக்காத மாணவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் வயது வந்து விட்டது. அவர்கள் இந்த தேர்தலில் திமுகவிற்கு பாடம் புகட்ட வேண்டும்.

அதிமுகவை பொறுத்தவரை மக்கள் தான் எஜமானவர்கள் வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்கிற அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம்.

பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டை அதிமுக சீரழித்து விட்டது என ஸ்டாலின் கூறுகிறார் என்னென்ன சீரழித்து விட்டோம் என அவர் பட்டியல் கூற வேண்டும். அப்படி கூறினால் நான் அதற்கு தகுந்த பதில் அளிக்கிறேன் முதலமைச்சராக இருப்பவர் ஆதாரத்தோடு பேச வேண்டும்.

அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி ரிப்பன் வெட்டுகிறார். ஐந்து மாவட்டங்களுக்கு பயன் பெரும் வகையில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட காவேரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை திமுக ஆட்சியில் முடக்கிவிட்டார்கள்.

எனவே தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி உள்ள அதிமுகவிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்தப் பிரச்சாரத்தின் போது அதிமுக ஆட்சியில் திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து எடப்பாடி பழனிச்சாமி பட்டியலிட்டார்
அப்பொழுது திருச்சியில் வ.உ சிதம்பரம் பிள்ளைக்கு அதிமுக ஆட்சியில் மணிமண்டபம் கட்டப்பட்டது என்றார். ஆனால் திருச்சியில் வ உ சிக்கு மணிமண்டபமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பரஞ்சோதி, சிவபதி, முன்னாள் எம்பி குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.