இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், 2024-25ஆம் ஆண்டிற்கான கலைச்செம்மல் விருதுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை தலைமைசசெயலகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு, கலைச்செம்மல் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு செப்பு பட்டயத்துடன் ரூ.1லட்சம் மானியம் வழங்கி விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் மரபுவழி ஓவியம், நவீன பாணி ஓவியம் மற்றும் சிற்பக் கலைகளில் திறமைமிக்க 6 கலைஞர்களுக்கு 2024-2025ஆம் ஆண்டிற்கான ‘கலைச்செம்மல்’ விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மரபுவழி ஓவியம், நவீன பாணி ஓவியம் மற்றும் சிற்பக் கலைகளில் திறமைமிக்க கலைஞர்களுக்கு ‘கலைச்செம்மல்’ விருது வழங்கி ஊக்குவித்து வருகிறது. இவ்விருதுடன், விருதாளர்களுக்கு செப்புப் பட்டயம், ஒரு இலட்சம் ரூபாய் விருதுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் 6 புகழ்பெற்ற கலைஞர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, 2024-2025ஆம் ஆண்டிற்கான ‘கலைச்செம்மல்’ விருதிற்கு மரபுவழி ஓவியப் பிரிவில் ஆ.மணிவேலு, மரபுவழி சிற்ப பிரிவில் வே.பாலச்சந்தர் மற்றும் கோ.கன்னியப்பன், நவீனபாணி ஓவியப் பிரிவில் கி.முரளிதரன் மற்றும் அ.செல்வராஜ், நவீனபாணி சிற்ப பிரிவில் நா.ராகவன், ஆகிய 6 கலைஞர்கள் தெரிவு செய்யப்பட்டு, அக்கலைஞர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் ‘கலைச்செம்மல்’ விருதுகளையும், விருதிற்கான செப்புப் பட்டயம், ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார்.
இந்த நிகழ்வின் போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன், இ.ஆ.ப., மற்றும் கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் (மு.கூ.பொ.) கவிதா ராமு, இ.ஆ.ப. ஆகியோர் உடனிருந்தனர்.