கடலூர் மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகைத்தர உள்ள நிலையில் அமைச்சர்கள் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டனர்.
கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கடலூர் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகின்ற 21-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதன் முன்னேற்பாடு பணிகள் குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.498 கோடி நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார், இந்த பணம் வருமா? வராதா? என இதை வைத்து அரசியல் செய்து வந்தார்கள். பணம் வராது என்று அண்ட புளுகு, புளுகுபவர்களை நம்ப வேண்டாம், நம்ப மாட்டார்கள், ஆக்ஷன் கிங் ஆக முதல்வர் விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையை அறிவித்து உள்ளார், அறிக்கை வெளியிடுகிறார்கள் சமூக வலைத்தளங்களில் அரசியல் செய்கிறார்கள் ஆனால் முதல்வர் களத்தில் உள்ளார் என அவர் தெரிவித்தார்.

அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
