பொதுமக்கள் பயன்பெறும் வகையில், முதல்வர் மருந்தகங்களை அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஜெனரிக் மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும்” என தெரிவித்திருந்தார். அதன்படி, தற்போது இந்த அறிவிப்பானது வெளியாகி இருக்கிறது.
தமிழகம் முழுவதும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் திட்ட விவரங்கள் மேற்படி அந்த இணையதளத்திலே வழங்கப்பட்டுள்ளன.
தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கவதற்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த திட்டத்தின் மூலம் முதல்வர் மருந்தகங்கள் உருவாக்கப்பட்டு, வரும் 2025 ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென இது தொடர்பான அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் மருந்தகங்களுக்கு விண்ணப்பிக்கலாம் : அரசு அறிவிப்பு
