விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. போட்டியை முன்னிட்டு கண்கவர் வானவேடிக்கை நிகழ்த்தப்பட்டது.

சிவகாசியில் வாரியர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக 11ம் ஆண்டு மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. சென்னை, கோவை, சேலம், தேனி, மதுரை, கடலூர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20 அணிகள் கலந்து கொண்டன. 3 நாட்கள் நடைபெற்ற இதன் இறுதி போட்டியில் சென்னை SBOA கூடைப்பந்தாட்ட கழக அணியும் கோவை யுனிடெட் கூடைப்பந்தாட்ட கழக அணியும் மோதியது. இரு அணிகளும் தொடர்ந்து விட்டுக்கொடுக்காமல் விளையாடிதால் போட்டி நேர முடிவில் இரு அணிகளும் சம புள்ளிகளை பெற்றதால் இரண்டு முறை கூடுதல் நேரம் வழங்கப்பட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

முடிவில் 97-91 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை SBOA கூடைப்பந்தாட்ட கழக அணி அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இடைவிடாது சுமார் 20 நிமிடம் கண்கவர் வானவேடிக்கை நிகழ்த்தப்பட்டது. தொடர்ந்து வெற்றி பெற்ற சென்னை அணிக்கு 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் வெற்றிக்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.




