• Sat. May 11th, 2024

ஆந்திராவில் பதற்றம் – முழு அடைப்புக்கு அழைப்புவிடுத்த சந்திரபாபு நாயுடு…

Byமதி

Oct 20, 2021

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததை கண்டித்து, தெலுங்கு தேச கட்சியின் மத்திய அலுவலகம், மூத்த தலைவர்களின் வீடுகள் மீது ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தெலுங்கு தேச கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான பட்டாபி ராம், செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசும்போது, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குறித்து தரக்குறைவாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் விஜயவாடா அருகிலுள்ள மங்களகிரியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் மத்திய அலுவலகத்தை நேற்று மாலை முற்றுகையிட்டனர்.

மேலும் தெலுங்கு தேச கட்சியின் மத்திய அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். மேலும், விசாகப்பட்டினம், அமராவதியில் உள்ள கட்சி அலுவலகங்களும், மூத்த தலைவர்களின் வீடுகளும் சூறையாடப்பட்டன.

இதனால், மாநிலம் முழுவதும் தெலுங்கு தேச கட்சியினருக்கும், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், பதற்றமான இடங்களில் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர மாநில டிஜிபி உறுதியளித்துள்ளார்.

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சந்திரபாபு நாயுடு, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. எனவே முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கூறினார். மேலும் நடைபெற்ற சம்பவங்கள் பற்றியும், ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அவர் புகார் அனுப்பியுள்ளார். அதனைத்தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் ஆட்சியை எதிர்த்து இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு சந்திரபாபு நாயுடு அழைப்புவிடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *