தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,
பூமத்திய ரேகையையொட்டிய இந்தியப் பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
வரும் 3 முதல் 6-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், 7-ம் தேதி கடலோர மாவட்டங்களிலும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் நிலவும்.
ஜன. 1-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 18 செ.மீ., நாலுமுக்கு பகுதியில் 16 செ.மீ., காக்காச்சியில் 15 செ.மீ. மாஞ்சோலையில் 13 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோடு, தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் ஆகிய இடங்களில் 3 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், திருநெல்வேலி மாவட்டம் சேர்வலாறு அணை ஆகிய இடங்களில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
