பழனி திண்டுக்கல் சோலையில் நிர்மல் குமார் என்பவர் செல்போன் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல நிர்மல் குமார் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இரவு நேரத்தில் நிர்மல் குமாரின் கடைக்கு வந்த திருடன் கதவில் இருந்த பூட்டை இரும்பு கம்பியால் உடைத்து கடைக்குள் நுழைந்துள்ளான்.

கடையில் இருந்த இரண்டு லட்சம் ரூபாய் பணம் மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளான். காலையில் கடைக்கு வந்த நிர்மல் குமார் கடை உடைக்கப்பட்டு திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக நகர காவல் நிலையத்திற்கு திருட்டு நடந்தது குறித்து நிர்மல் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது இரவு நேரத்தில் கம்பியுடன் வந்த நபர் பூட்டை உடைத்து கடைக்குள் நுழைந்து திருடி சென்றது தெரிய வந்தது. திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து திருடனை தேடி வருகின்றனர்.