மேற்குவங்கம் மாநிலத்தில் பிர்பும் வன்முறை வழக்கை சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு.
மேற்குவங்கத்தில் 8 பேர் தீ வைத்து எரித்துக் கொள்ளப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிர்பும் பகுதியில் நடந்த வன்முறை குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்த நிலையில், வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த திங்கள்கிழமை மேற்குவங்க மாநிலத்தில் பிர்பும் அருகே பஞ்சாயத்து துணைத்தலைவர் வெட்டிக் கொல்லப்பட்டதால் 8 பேர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டனர். பஞ்சாயத்து துணை தலைவர் கொலைக்கு பழிவாங்க 10 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதில் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற அந்த மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார். அதனடிப்படையில் அங்கு பஞ்சாயத்து துணை தலைவர் ஒருவர் கைதும் செய்யப்பட்டார். தொடர்ச்சியாக துரித நடவடிக்கை எடுப்பதற்கு நாங்களும் தயாராக உள்ளோம் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் 8 பேர் தீ வைத்து எரித்துக் கொள்ளப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க ஆணையிட்டுள்ளது. முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஏப்ரல் 7-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய சிபிஐக்கு கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.