• Mon. May 13th, 2024

டெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்றுக் கூட்டம்..!

Byவிஷா

Oct 11, 2023

காவிரி ஒழுங்காற்றுக் கூட்டம் இன்று டெல்லியில் அவசரமாகக் கூடுகிறது. 15 நாட்களுக்கு வினாடிக்கு 13000 கனஅடி நீரைத் திறக்கும்படி கோரிக்கை வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்திற்கு தரவேண்டிய உரிய அளவு தண்ணீரை காவிரியில் இருந்து கர்நாடகா அரசு தொடர்ந்து தர மறுத்து வருகிறது. தங்களது ஆணைகளில் போதிய அளவு நீர் இல்லை. அதனால் தங்களால் நீர் திறக்க முடியாது என தொடர்ந்து கர்நாடக அரசு வலியுறுத்தி வருகிறது. தமிழக அரசு சார்பில் கர்நாடக அரசு உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வருகிறது என்றும், சராசரி அளவில் அணைகளில் தண்ணீர் இருக்கிறது என்றும் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஏற்கனவே கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில், தமிழகத்திற்கு வினாடிக்கு 3000 கனஅடி நீர் அடுத்த 10 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவை அடுத்து கர்நாடக அணைகளில் இருந்து 3000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணையில் தண்ணீர் நிரம்பி வருகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்திற்கு கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவானது வினாடிக்கு 3000 கனஅடியில் இருந்து 8000 கனஅடியாக தற்போது உயர்ந்துள்ளது.
இந்நிலையில் முன்னதாக அக்டோபர் 12 (நாளை) 88 வது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் கூடும் என காவிரி ஒழுங்கற்று குழு தலைவர் வினித் குப்தா அறிவித்து இருந்தார். ஆனால், அவசர நிலை காரணமாக இன்று டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் கூடுகிறது.
இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் கலந்து கொள்ளும் நீர்வளத்துறை அதிகாரிகள் தமிழகத்திற்கு 13,000 கனஅடி நீர் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்த உள்ளனர். ஏனென்றால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் சுத்தமாக குறைந்து தற்போது வினாடிக்கு 500 கனஅடி நீர் குடிநீர் தேவைக்காக மட்டுமே திறந்து விடப்படும் நிலை உள்ளது. இதன் காரணமாக விவசாயத்திற்கு சுத்தமாக தண்ணீர் இல்லாத நிலைமை ஏற்பட்டு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இன்று தமிழக அதிகாரிகள் முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *