திரைப்படம் எடுப்பதாக ரூ.6.50 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்ததாக கன்னட திரைப்பட பெண் இயக்குநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பசவேஸ்வராநகரைச் சேர்ந்தவர் பிந்து. மருத்துவரான இவர், கடந்த 2019-ம் ஆண்டு கன்னட சினிமா பெண் இயக்குநரான விஸ்மயா கவுடாவுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது. இதன் பின் இருவரும் நண்பர்களாகியுள்ளனர். இந்த நிலையில் தான் புதிதாக இயக்க உள்ள ‘டியர் கண்மணி’ என்ற திரைப்படத்திற்கு பணம் தேவைப்படுவதாக மருத்துவர் பிந்துவிடம் விஸ்மயா கவுடா கூறியுள்ளார்.
இதையடுத்து விஸ்மயா கவுடாவிடம் 6.50 லட்ச ரூபாயை மருத்துவர் பிந்து வழங்கியுள்ளார். ஆனால், இந்த பணத்தை விஸ்மயா திரும்பி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்த பணத்தைக் கேட்டதற்கு கடந்த ஆண்டு 6.50 லட்சத்திற்கான காசோலையை பிந்துவிடம் விஸ்மயா வழங்கியுள்ளார். ஆனால், அவரது கையெழுத்து சரியாக இல்லை என்று காசோலையை வங்கி அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். இதனால் பிந்துவிற்கு பணத்தை வழங்கவில்லை.
இந்த நிலையில், தன்னிடம் 6.50 லட்ச ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்து விட்டதாக பெங்களூரு நீதிமன்றத்தில் இயக்குநர் விஸ்மயா மீது மருத்துவர் பிந்து வழக்குத தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நிதிமன்றம், ரூ.6.50 லட்சம் கடன் மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி பசவேஸ்வராநகர்
காவல் துறைக்கு உத்தரவிட்டனர்.
இதன் பேரில் இளம் இயக்குநரான விஸ்மயா கவுடா மீது பசவேஸ்வராநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடன் மோசடி குறித்து அவரிடம், விசாரணை நடத்துவதற்காக நோட்டீஸ் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளது பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.