பழங்காநத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரு பிரிவினரிடையே மதமோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தன. இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் சங்கீதா பிறப்பித்தார். இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, பழங்காநத்தம் பகுதியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி அளித்தது.
இதனைத் தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஸ், மாநில செயலாளர் சேவுகன், புதுச்சேரி மாநில தலைவர் குமார், ஆர்எஸ்எஸ் தென் பாரத அமைப்பாளர் வன்னியராஜன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா பேசினார். அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஹெச்.ராஜா, இரு பிரிவினரிடையே மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அவர் மீது சுப்பிரமணியபுரம் காவல்துறை 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஏற்கெனவே 144 தடையை மீறி திருப்பரங்குன்றத்தில் மலையைக் காப்போம் போராட்டத்தில் ஈடுபட வந்த இந்து அமைப்பைச் சேர்ந்த 87 பேரும், திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 62 பேரும், திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் சஷ்டி மண்டபம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 46 பேரும் என 195 பேர் மீது திருப்பரங்குன்றம் காவல்துறையினர் இரண்டு வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.