எடப்பாடி தலைமையில் சுயமரியாதை…
மாஜிக்களின் மனநிலை!
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று இம்முறை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செப்டம்பர் 5 ஆம் தேதி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதிக்க., அடுத்த நாளே செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை பறித்தார் எடப்பாடி.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும். இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாள் கெடு விதித்து பேசி இருந்தார். இந்த கருத்து அதிமுகவில் பெரும் தீயை பற்ற வைத்தது.
இந்த நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தேனி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவர் கம்பத்தில் பேசும் போது இது குறித்து எப்படியும் கருத்து தெரிவிப்பார் என பத்திரிக்கையாளர்களும், அனைத்து டிவி சேனல்களும், ஊடகத் துறையினரும் அவரையே நோக்கி குவிந்திருந்தனர். ஆனால் எடப்பாடி எள்ளளவு கூட வாய் திறக்காமல் இரவு 12 மணி அளவில் திண்டுக்கல் வந்து சேர்ந்தார்.
அரியநாயகம்
இந்நிலையில் செப்.6ம் தேதி காலையில் முன்னாள் அமைச்சர் எஸ் .பி.வேலுமணி, திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிச்சாமி தங்கி இருந்த தனியார் ஓட்டலுக்கு வந்ததும் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து கருப்பு கூலிங் சீட் ஒட்டிய கண்ணாடி காரில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கே.பி .முனுசாமி,காமராஜ், ஓ.எஸ். மணியன் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோரை தனித்தனியாக அழைத்து தனியார் ஓட்டலுக்கு வந்தனர்.
பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஏழு பேரும் சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தினர். காலை 10 மணிக்கு துவங்கிய ஆலோசனை பகல்12 மணி வரை தொடர்ந்தது 2மணி நேரம் நீடிடித்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் செங்கோட்டையன் வைத்த ஒருங்கிணைப்பு கருத்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த நடவடிக்கைக்கு முன்னதாக செப்டம்பர் 6 ஆம் தேதி திண்டுக்கல்லில் நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் , துணை பொதுச் செயலாளர்கள் நத்தம் விசுவநாதன், கே.பி. முனுசாமி, தலைமை நிலையச் செயலாளர் வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில், திண்டுக்கல் சீனிவாசன் எடுத்து வைத்த கருத்துகள் சிரிப்பை மட்டுமல்ல சிந்தனைனையும் தூண்டுவதாக இருந்திருக்கின்றன.
அப்படி என்னதான் சொன்னார் திண்டுக்கல் சீனிவாசன்?
“மீண்டும் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் இணைந்து பணியாற்ற முடியாது. சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவினரை அடிமையாகவே நடத்தினர். அமைச்சர்களை எடுபிடிகளாக வேலை வாங்கினர்.
அவர்களுக்கு வளைந்து குனிந்து இனி கும்பிட முடியாது. தற்போது எனக்கு முதுகு வலி இருக்கு. இனிமே குனிய முடியாது.
மேலும் சசிகலா உறவினர்கள் ,டிடிவி தினகரன் உறவினர்கள் திண்டுக்கல் வந்தால் ஸ்டார் ஓட்டலில் தங்குவேன் என்று அடம்பிடிப்பார்கள். ஈரல் முதல் நாட்டுக் கோழி சாப்ஸ், இடியாப்பம் வரை கடை கடையாக அலைந்து அவர்களுக்கு வாங்கித் தர முடியாது. மீண்டும் கட்சியில் அதிகாரம் செலுத்துவார்கள். தொண்டர்களுக்கு சுதந்திரம் கிடைக்காது.
எடப்பாடி பழனிச்சாமியால் தொண்டர்களுக்கு கட்சி நிர்வாகிகளுக்கோ தொந்தரவு இல்லை. கட்சியில் செலவு செய்வதற்கு யார் மீதும் சுமைகளை தூக்கி எடப்பாடி வைக்க மாட்டார். சுதந்திரமாக சுயமரியாதையோடு எங்களை நடத்துகிறார். ஓ.பி.எஸ். திமுக ஜெயிப்பதில் மட்டுமே குறியாக இருப்பார். அதற்கான அன்டர் கிரவுண்ட் வேலைகளை அதிகமாக செய்வார்.
அதிமுகவுக்கு விசுவாசம் இல்லாதவர்களோடு மீண்டும் இணைவதை விஸ்வநாதனும் விரும்ப மாட்டார் ,நானும் விரும்பமாட்டேன்” என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச, இவரின் பேச்சை கேட்டு சீனியர்கள் சிரித்து மகிழ்ந்ததாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதற்குப் பின்பு செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கும் முடிவை எடுத்துள்ளனர்.
செங்கோட்டையனை பொறுப்புகளில் இருந்து நீக்கும் முடிவை, வெளியே செல்லும்போது கட்சி நிர்வாகிகள் யாரும் சொல்லக்கூடாது. டி.வி.களில் பிரேக்கிங் செய்தி வந்த பின்பு பேசிக் கொள்ளலாம். குறிப்பாக ஜெ. நியூஸ் வந்த பின்பு தெரிவிக்கலாம். சீனியர் முன்னாள் அமைச்சர்கள் கூட்டமாக செல்லக்கூடாது. தனித்தனியாக செல்ல வேண்டும். நிருபர்கள் கேட்டால் வாயை திறக்க கூடாது என பல கட்டுப்பாடுகளை எஸ் பி வேலுமணி விதித்தாகவும், இதற்கு எடப்பாடி ஓ.கே சொல்லியுள்ளார்.
அதே நேரத்தில் எடப்பாடி சேலத்தில் இருந்தாலும், திருநெல்வேலியில் இருந்தாலும் சென்னையில் பேட்டி கொடுக்கும் ஜெயக்குமார். இந்த முறை எந்த பேட்டியும் கொடுக்க வேண்டாம். அவர் பேச்சு கொடுக்கும் போது நிருபர்கள் கேள்வி கேட்டு ஏதாவது ஏடாகூடமாக வந்துவிடும். இதனால் ஜெயக்குமாருக்கு எடப்பாடி தடை போட்டிருப்பதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
