மதுரையில் திருநகர் பக்கம் அமைப்பு கடந்த 2020ல் நிலையூர் கால்வாய் கரைகளில் ஆயிரத்திற்கும் அதிகமான பனை மர விதைகளை பல தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பில் விதைத்தது. அவைகள் 2024 ஆம் ஆண்டு பல விதைகள் முளைத்து 3 முதல் 6 அடி பனை கன்றுகளாக வளர்ந்துள்ளது. இந்த சூழலில் கடந்த 18.11.2024 திங்கட்கிழமை அன்று பொதுப்பணித்துறை (நீர்வளம்) மேற்கொண்ட கால்வாய் சீரமைப்பு பணியின் போது பல பனை மரக்கன்றுகளை அகற்றியுள்ளது.

தமிழ்நாடு அரசு பனை மரங்கள் காக்க பல முயற்சிகள் எடுத்து வரும் சூழலில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அரசின் அறிவிப்புகளை அலட்சியப் படுத்தும் விதமாக சரியான வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படாமல் ஜேசிபி இயந்திரம் கொண்டு கன்றுகளை சேதப்படுத்தியும், வேரோடு பிடிங்கியும் பனை மரக்கன்றுகளை அழித்துள்ளது. மழைக் காலத்திற்கு முன் இப்பணியை தொடங்கி இருந்தால் கால்வாயினுள் இருங்கி தூர்வாரி இருக்கலாம். ஆனால் மாறாக மழைக்காலத்தில் கரையில் மேல் இருந்து தூர்வாரும் முயற்சியில் இறங்கியது மட்டும் இல்லாமல். பணிக்கு இடையூறாக இருக்கிறது என்று கூறி ஐம்பதுக்கும் அதிகமான பனை மரங்கள் சேதப்படுத்தி அழித்துள்ளது.

நான்கு ஆண்டுகள் பல தன்னார்வலர்கள் முயற்சியில் வருடம்தோறும் பராமரித்து வளர்க்கப்பட்ட பனை கன்றுகள் அழிக்கபட்டதால் மீண்டும் நீர்நிலைகளின் கரையில் பனை மரம் விதை விதைத்து வளர்க்கச்செய்ய இன்னும் ஐந்து ஆண்டுகள் ஆகும். இது தமிழ்நாடு அரசு பனை மரங்களை அதிகப்படுத்த ஒதுக்கிய கோடிக்கணக்கான நிதி மற்றும் தோட்டக்கலை துறை மூலம் பணங்கொட்டைகள் விநியோகம் செய்து வளர்க்கப்பட்ட பனை மரங்கள் அழிகப்பட்டதால் நிதி அனைத்தும் வீணாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பொதுப்பணித்துறைக்கு முறையான வழிகாட்டுதல்கள் வழங்கி அதை நடைமுறைப் படுத்தாததே காரணம்.


இது போன்ற அலட்சியப் போக்குகள் இனி வரும் காலத்தில் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மூலம் சம்பந்தபட்ட துறையினருக்கு அறிவுறுத்தப் படவேண்டியது அவசியமாகபடுகிறது.
தமிழ் நாட்டின் மாநில மரமான பனை தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவது உடனே தடுக்கப்பட வேண்டும். பனை மரங்களை வெட்டுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
