• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அதிமுக பக்கம் திரும்பாத கேமராக்கள் : இ.பி.எஸ் குற்றச்சாட்டு

Byவிஷா

Jan 9, 2025

தமிழக சட்டப்பேரவையில் நடக்கும் நிகழ்வுகள் சபாநாயகரோடும், திமுக உறுப்பினரோடும் படம் பிடிக்கும் கேமராக்கள் எங்கள் பக்கம் திரும்புவதில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் 4வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் அதிமுக தரப்பில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக தொடர்ச்சியாக கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக யார் அந்த சார்? என்று அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்களின் சட்டையில் பேட்ஜ் அணிந்து வருவதை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காய்ச்சல் காரணமாக பங்கேற்கவில்லை. இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், ஆளுங்கட்சி வரிசையோடும், சபாநாயகரோடும் முடிந்துவிட்டதா சட்டப்பேரவை? சட்டப்பேரவையின் கேமராக்கள் இன்றும் எதிர்க்கட்சியின் பக்கம் திரும்பவே இல்லை. எதிர்க்கட்சி வரிசை உங்களை அவ்வளவு அச்சுறுத்துகிறதா முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே? எதற்காக இவ்வளவு அஞ்சி நடுங்குகிறீர்கள்? “யார் அந்த சார்?” என்ற நீதிக்கான கேள்வி உங்களை அவ்வளவு உறுத்துகிறது என்றால், மீண்டும் கேட்கிறேன் , யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் அரசு? மக்கள் நலனுக்கான, எதிர்க்கட்சியின் கேள்விகளை மக்கள் பார்த்துவிடக் கூடாது என்று ஸ்டாலின் மாடல் அரசு எத்தனிப்பது ஜனநாயகப் படுகொலை! தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை, எந்தவித ஒளிவு மறைவுமின்றி, முழுமையாக, மக்களின் குரலான எதிர்க்கட்சியின் கருத்துக்களை மக்களுக்கு நேரடி ஒளிபரப்ப வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடு சட்டமன்றம், பொதுமக்களின் தேவையை சபையேற்றி, சட்டமியற்றி, திட்டமியற்றி செயல்படும் தமிழக மக்களின் மேடை; திமுகவின் பொதுக்கூட்ட மேடையல்ல என்று விமர்சித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே அதிமுக எம்எல்ஏ-க்களின் செயல்பாடுகள், கேட்கப்படும் கேள்விகள் எதுவும் நேரலையில் ஒளிபரப்பாவதில்லை என்று விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.