புதுச்சேரி குடிமைபொருள் வழங்கல் துறை அலுவலகம் பாக்கமுடையான்பேட் தொழிற்பேட்டை சாலையில் இயங்கி வருகிறது. இங்கு ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து பணிகளும் நடைபெறுகிறது.

ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், மானியம் வழங்குதல், கார்டு பிரித்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. இங்கு பொதுமக்கள் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மீது அங்குள்ள ஏரியா இன்ஸ்பெக்டர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து பிறகு பொதுமக்களின் விண்ணப்பங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்நிலையில் சில தரகர்கள் பொதுமக்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு புதிய ரேஷன் கார்டு போடுதல், பிரித்தல், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருவதாக நீண்ட காலமாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் அலுவலகத்தின் வெளியே அமர்ந்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் நபர்கள் அலுவலகம் வரும் பொதுமக்களிடம் அலுவலகத்தில் நேரடியாக சென்றால் வேலை நடக்காது, ஏரியா இன்ஸ்பெக்டர் மற்றும் அலுவலகத்தில் உள்ளே வேலை செய்பவர்களுக்கு பணம் கொடுத்தால் தான் உங்களுக்கு வேலை நடக்கும். எங்களிடம் விண்ணப்பத்தை கொடுங்கள் உங்கள் வேலையை முடித்து தருகிறோம் என்று கூறி பொதுமக்களிடம் விண்ணப்பத்தை வாங்கி கொள்கின்றனர். பிறகு வேலைக்கு ஏற்றவாரு ரூ.1000 முதல் ரூ.10 ஆயிரம் வரை பணத்தை வாங்கி கொண்டு தரகர்கள் செயல்பட்டுள்ளனர்.

இதனிடையே ேநற்று இது குறித்து குடிமை பொருள் வழங்கல் துறை தாசில்தார் சரவணனிடம் புகார் சென்றுள்ளது. இதையடுத்து அவர் நேற்று காலை அலுவலகத்தின் வெளியே தரகர் வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் வந்து நீங்கள் எப்படி பொதுமக்களிடம் பணம் வாங்கலாம். இதுபோன்ற பிராடு வேலை செய்தால் உங்களை இங்க இருக்க விடமாட்டேன் என சரமாரியாக கேள்வி கேட்டார். ஒரு அதிகாரி நேரடியாக சாலையில் இறங்கி வந்து தரகர்களை எச்சரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.