• Sat. Feb 15th, 2025

‘பூஸ்டர்’ தடுப்பூசி அவசியமில்லை: உலக சுகாதார நிறுவனம்!…

By

Aug 19, 2021

சமீபத்திய தரவுகளின்படி, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை என்று, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறினார்.

நாடு முழுவதும் 56 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசிக்கான தேசிய தொழில் நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா கூறுகையில், ‘அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் 2 டோசும் மக்களுக்கு போட கவனம் செலுத்தப்படுகிறது. இதுவரை பூஸ்டர் டோஸ் பற்றி விவாதிக்கவே இல்லை.

அனைவருக்கும் முழுமையாக கொரோனா தடுப்பூசி என்ற முதன்மையான நோக்கம் நிறைவேறிய பின்னர்தான் ‘பூஸ்டர் டோஸ்’ பற்றி கவனத்தில் கொள்ளப்படும்.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பல்வேறு விதமான நோய் எதிர்ப்புச்சக்திகள் உருவாகின்றன.

தடுப்பூசிக்கு பிறகு பொதுவான நோய் எதிர்ப்புச்சக்தி உருவாகிறது. அதே நேரத்தில் ‘டி’ செல்நோய் எதிர்ப்புசக்தியும் உள்ளது’ என்றார்.

இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறுகையில், ‘சமீபத்திய தரவுகளின்படி, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை.

ஏழை நாடுகளின் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட கவனம் செலுத்த வேண்டும்.

அப்போதுதான் பணக்கார நாடுகள் பூஸ்டர் டோஸ் போடுதல் குறித்து முடிவு செய்ய வேண்டும். பூஸ்டர் தடுப்பூசி குறித்து இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன’ என்றார்.

அமெரிக்காவில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதற்கு அந்நாட்டின் எப்.டி.ஏ. என்னும் உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, பைசர்-பயோ என்டெக், மாடர்னா தடுப்பூசிகளின் பூஸ்டர் டோஸ்க்கு இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.