• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் ?

சென்னையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்ம நபர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார்.

இதனை தொடர்ந்து சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீடு மற்றும் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது வெடிகுண்டு எதுவும் இல்லை என போலிசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்தநிலையில், முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர், செங்கல்பட்டு மாவட்டம் வடபுறந்த வாக்கம் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன்(37) என்பவர் ஆவர். அவர் மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

இவர் கடந்த 2021-ம் ஆண்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்ததால் கோயம்பேடு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டு இருக்கும் நபர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு சிறிதளவு பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆவர். அரசாங்கம் தனக்கு வீடு தர வேண்டுமென 2020ஆம் ஆண்டு கோரிக்கை வைத்து தற்போதுவரை வீடு கிடைக்காததால், விரக்தியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்தது தெரியவந்தது.