விஜயபாஸ்கர் டிக் செய்வது யாரை?
புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் வரும் தேர்தலில் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதைவிட, அதற்கு முன்னதாக பாஜகவின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து கடும் விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஒன்றியத்திலும் குறைந்தது மூன்று பொதுக் கூட்டங்களாவது நடத்த வேண்டும், அந்தக் கூட்டங்களுக்கு பொதுமக்களை அழைக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அதே நேரத்தில் அழைத்து வருபவர்கள் கட்சியின் உறுப்பினராக மட்டும் இருக்க வேண்டும். அவர்களில் பத்துப் பேரைக் கண்காணித்து உறுதிப் படுத்திக் கொள்ள பகுதி செயலாளர் அல்லது பொறுப்பாளர் முன்வர வேண்டும்.
அவர் பாஜக அல்லது சார்பு அணிகளில் உறுப்பினராக இருத்தல் அவசியம். மற்றவர்களை கூட்டம் காட்டுவதற்காக அழைத்து வருவதால் எந்தப் பயனும் கிடையாது என்பதால் கிடைக்கும் பலன் பாஜகவைச் சேர்ந்தவர்களாக மட்டும் இருந்து பயன் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் வலியுறுத்தப் பட்டிருக்கிறது.
வரக் கூடிய தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி அமைந்துள்ள நிலையில், கடந்த மாதம் புதுக்கோட்டைக்கு வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க பாஜகவினர் பெரும் முயற்சி எடுத்திருந்தனர். வந்திருந்த கூட்டத்தில் எந்தப் பக்கம் பார்த்தாலும் பாஜகவின் கொடிகளும் தோரணங்களும் துண்டுகளும் பலூன்களும் ஏந்தியபடி தொண்டர்கள் நிறையப் பேர் வந்திருந்தனர்.
கூட்டணி உறுதி என்ற நிலைப்பாட்டில் புதுக்கோட்டை சட்ட மன்றத் தொகுதியை அதிமுகவிடம் கேட்டுப் பெற்று விடுவது என்ற முடிவெடுத்துச் செயலாற்றி வருகிறார்கள் பாஜகவினர்.
அதற்குக் காரணம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு சட்ட மன்றத் தொகுதிகளுக்கும் கூட்டணிகள் சார்பில் இன்னார்தான் வேட்பாளர் என்ற கணிப்பில் அனைவரும் இருக்கும் நிலையில் புதுக்கோட்டை மட்டும் சற்று தடுமாற்றமாகவே இருக்கிறது.
அதிமுக கூட்டணியில் ஏற்கனவே திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த பாசறை கருப்பையாவிற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று அனைவராலும் எதிர் பார்த்திருந்த வேளையில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் ஆதரவாளராக இருக்கும் பழனிவேலு களத்தில் முந்தியிருப்பதாகவும் ஒரு தகவல் உள்ளது.
அவருக்கா? கட்சியில் நீண்ட காலமாக இருப்பவர்களுக்கா? என்று பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் அதை முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கும் முன்னாள் அமைச்சரும் புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளருமான சி.விஜயபாஸ்கர் கூட்டணிக் கட்சிக்கு சீட் ஒதுக்கவும் வாய்ப்பு உள்ளது என்று பரவலான கருத்தும் பரவியிருக்கிறது.
அதனால் இப்போது பாஜக நான் முந்தி நீ முந்தி என்று எம்எல்ஏ சீட்டுக்கு போட்டிபோடத் துவங்கியிருக்கிறார்கள்.
ஒருவேளை புதுக்கோட்டை தொகுதி பாஜகவுக்குத்தான் என்றால், பாஜக வேட்பாளர் தேர்வு என்பது விஜயபாஸ்கரின் ஆதரவு இல்லாமல் செய்ய முடியாது. அந்த வகையில், விஜயபாஸ்கரைப் பொறுத்த மட்டிலும், பாஜக மாவட்டப் பொருளாளர் விஜய் முருகானந்தம். அவர் நாம் முன்னரே குறிப்பிட்ட பழனிவேலுவின் சொந்தத் தம்பியாவார்.
பணபலம் மிக்கவர். கடந்த ஆட்சியின்போது அமைச்சர் விஜயபாஸ்கரின் காருக்கு இணையாக தனது கார்களையும் செலுத்தும் வல்லமை பெற்றவர். இப்போதே இந்தப் பகுதியில் உள்ள தேமுதிக தொண்டர்கள் அதிமுக பழனிவேலு பக்கம் இருக்கிறார்கள்
இன்னொருவர் பாஜக மாவட்டத் தலைவர் இராமச்சந்திரன். அவர் விஜயபாஸ்கரின் உறவினர் என்பதைத் தாண்டியும் ஆற்றல்மிக்க செயல்வீரர். அதனால் அவரிடம் தனிப்பட்ட முறையில் பற்றும் பாசமும் வைத்திருக்கிறார். பாஜக வரலாற்றில் இராமச்சந்திரன் மாவட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டபிறகு நிறைய மக்கள் பிரச்சினைகளைக் கையில் எடுத்துக் கொண்டு பல போராட்டங்களை நடத்தியவர்.
இந்த இருவரில் பொருளாதார ரீதியாக பலமாக இருப்பவர் மாவட்டப் பொருளாளர் முருகானந்தம். செயலாற்றக் கூடியவர் ராமச்சந்திரன். இம்முறை இருவரில் யாருக்காவது ஒருவருக்கு சீட் பிடித்துவிட வேண்டும் என பாஜக முனைப்பு காட்டி வருகிறது.
அதனால்தான் நாம் முதல் பத்தியில் சொன்னதைப் போல கடுமையான விதிமுறைகளோடு கூட்டங்களை நடத்தி வருகிறது பாஜக.
