• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய வழக்கு: பாஜக பெண் நிர்வாகி கைது

ByP.Kavitha Kumar

Mar 12, 2025

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிவிட்டு 3 மாதமாக தலைமறைவாக இருந்த பாஜக பெண் நிர்வாகியை போலீசார் இன்று கைது செய்தனர்.

கடந்த 2024 நவம்பர் 31-ம் தேதி ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த போது விழுப்புரத்தில் கனமழை பெய்தது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகளும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கின. இதில் அரசூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தில் வெள்ளத்தில் வீடுகள் மூழ்கி 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.

அந்நிலையில், வெள்ளத்தால் குடியிருப்புகளையும், உடைமைகளையும் இழந்த பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிக்கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த அமைச்சர் பொன்முடி, அப்போதைய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர்.

இருவேல்பட்டில் சாலை மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் அமைச்சர் பொன்முடி காரிலிருந்து இறங்கி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அங்கிருந்த இருவர் சேற்றை வாரி வீசினர். இதில் அமைச்சர் பொன்முடி, முன்னாள் எம்.பி. பொன். கவுதமசிகாமணி, மாவட்ட ஆட்சியர் பழனி உள்ளிட்டோரின் சட்டை மீது சேறு தெறித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த காவல் கண்காணிப்பாளர்கள் தீபக் ஸ்வாட்ச், ஜெயக்குமார் ஆகியோர் அமைச்சர் உள்ளிட்டோரை பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மீது சேற்றை வீசியெறிந்ததாக இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் விழுப்புரம் மாவட்ட பாஜக மகளிரணி முன்னாள் துணைத்தலைவர் விஜயராணி ஆகியோர் மீது திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை கைது செய்யச் சென்ற போது இருவரும் தலைமறைவானார்கள். போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் கடந்த 21-ம் தேதி ராமகிருஷ்ணனை திருவெண்ணைநல்லூர் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி விஜயராணி இன்று போலீசாரிடம் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர்.