கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்காம்புலியூர் பகுதியில் சேலம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் மேல் நல்லதங்காள் ஓடையை சார்ந்த அஜீத் (வயது 20) என்ற இளைஞருக்கு அவரது நண்பர்கள் பட்டாசு வெடித்தும், மது அருந்தியும், கேக் வெட்டியும், பட்டாக்கத்தியுடன் நின்று கொண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை வீடியோவாக பதிவு செய்த அந்த இளைஞர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். அதனடிப்படையில் கரூர் நகர போலீசார் ரத்தினம் சாலையை சார்ந்த தினேஷ்குமார் (வயது 25), சுரேஷ் (வயது 22), மேற்கு பிரதட்சணம் சாலையை சார்ந்த சந்துரு (வயது 23), சேர்மன் ராமானுஜ நகரை சார்ந்த ஜினீத் (வயது 18), வடக்கு லட்சுமி புரத்தை சார்ந்த கணேஷ் (வயது 17), சின்னாண்டான் கோவிலை சார்ந்த ஆகாஷ் (வயது 21) ஆகியோரை கைது செய்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கூட்டு கொள்ளை அடிக்க ஒன்று கூடி திட்டம் தீட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 3 கத்திகளையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நீதிபதி 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கும்படி உத்தரவிட்டதன் அடிப்படையில் அவர்களை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர். மேலும், இதில் முக்கிய குற்றவாளிகளான நல்லதங்காள் ஓடையை சார்ந்த அஜீத், முத்துராஜபுரத்தை சார்ந்த ஹரிஹரன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் 6 பேரில் 5 பேர் மற்றும் பிறந்த நாள் கொண்டாடிய அஜீத் மீது கரூரில் பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.