தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர் திரு.ஸ்ரீ புவன் பூஷன் கமல் அவர்கள் 15.09.2025 அன்று பிற்படுத்தப்பட்டோர் இன மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் பொருட்டு மதுரை மாவட்டத்திற்கு வருகை புரிந்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படுத்தப்படும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சேர்ந்த மக்களுக்கான கல்வி விடுதிகள், கல்வி உதவித்தொகை, டாப்செட்கோ கடன் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்கள் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளில் பாதிக்கப்படும் பட்சத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் நேர்வுகளில் எவ்வித பாரபட்சமின்றி புகார்களை கையாளுமாறு ஆணைய உறுப்பினர் அவர்களால் காவல்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மதுரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக நிருவாகத்தின் கீழ் இயங்கும் விடுதிகளில் முதல் நிலை அலுவலர்களால் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மதுரை, மருத்துவ கல்லுாரியில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களில் இன சுழற்சி முறை (Communal Roster) கடைபிடிப்பது தொடர்பாகவும் மாணவர் சேர்க்கையில் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு(Reservation) குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் ஆய்வு கூட்டத்தின் இறுதியாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர் அவர்களால் மதுரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பாக நலத்திட்ட உதவிகள் 10 பயனாளிகளுக்கு ரூ.60,000 மதிப்பில் தேய்ப்பு பெட்டி வழங்கப்பட்டது.