மதுரை கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த சரண்யா, இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், பிரசவத்திற்காக மதுரை இராஜாக்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், மதுரையில் உள்ள அரசு இராஜாஜி மருத்துவமனை மகப்பேறு மையத்திற்கு செல்லுமாறு சரண்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

இதையடுத்து சரண்யாவை அழைத்துக் கொண்டு சென்ற 108 ஆம்புலன்ஸ் மதுரை ரிங்ரோடு சாலையில் செல்லும் போது சரண்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் சின்னக்கருப்பன் பிரசவம் பார்த்துள்ளார். இதில், சரண்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இதைத் தொடர்ந்து தாயும், சேயும் அரசு இராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் சின்னக்கருப்பன் மற்றும் வாகன ஓட்டுநர் இருளாண்டி ஆகியோருக்கு பொதுமக்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.