• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அயலி – விமர்சனம்

Byதன பாலன்

Jan 26, 2023

அயலி என்கிற பெண் தெய்வத்தை வணங்கும் ஊர்மக்கள், பெண்பிள்ளைகள் பருவமெய்தியதும் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்றும் உடனடியாகத் திருமணம் செய்துவிட வேண்டுமென்றும் கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள்.
பல நூறு ஆண்டுகளாகத் தொடரும் அந்தப்பழக்கத்தால் பள்ளி இடைநிற்றல், சிறு வயது திருமணங்கள் அதனால் பல பாதிப்புகள் ஆகியனவற்றை அந்த ஊர்ப் பெண்கள் சந்திக்கிறார்கள்.
1990 இல் அந்த ஊரில் இருந்து பள்ளிக்குச் செல்லும் தமிழ்ச்செல்வி என்கிற மாணவிக்குள் பல கேள்விகள்.அவற்றிற்குத் துணிச்சலான செயல்கள் மூலம் விடை கண்டறிவதுதான் அயலி இணையத் தொடர்.சிறுதெய்வ வழிபாடுகள் எப்படித் தோன்றின? அவை எவ்வாறு தொடர்கின்றன? என்பன குறித்தெல்லாம் விளக்கமாகச் சொல்லிவிட்டுக் கதைக்குள் செல்கிறார்கள். அதனால் ஒவ்வொரு காட்சியையும் ரசித்துப் பார்க்க முடிகிறது.
தமிழ்ச்செல்வியாக நடித்திருக்கும் அபிநட்சத்திரா, அவருடைய அம்மாவாக வரும் அனுமோல் ஆகிய இருவரும் தங்கள் சிறந்த நடிப்பால் தொடர் வேகமாகச் செல்ல உதவுகிறார்கள்.
அலட்சியப் புன்னகையுடன் ஒவ்வொரு கல்லாகத் தக்ர்த்தெறியும் அபியும், மிகப்பெரிய விசயத்தை அநாயசமாக மறைக்கும் மகளைப் பார்த்து வியந்து ரசிக்கும் அனுமோலும் பல இடங்களில் கைதட்டல் பெறுகிறார்கள்.
தலைமையாசிரியராக நடித்திருக்கும் காயத்ரி, உதவி தலைமையாசிரியாக நடித்திருக்கும் டிஎஸ்ஆர் ஆகிய இருவரின் பாத்திரப்படைப்புகள் பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான மோதல்களைச் சரியாகச் சித்தரிக்கின்றன.
தமிழ்ச்செல்வியின் அப்பா அருவிமதன், வில்லன் லிங்கா, அவருடைய அப்பா சிங்கம்புலி ஆகியோரும் நன்று.ஒரேகாட்சியில் வந்தாலும் மிடுக்குடன் வந்து போகிறார் லட்சுமிபிரியா.
ஊர்ப்பஞ்சாயத்துக்காட்சியில் பிரகதீஸ்வரன், செருப்பை ஓங்கி தரையில் அடிக்கும் காட்சி சிரிப்பு மழையுடன் கூடிய செருப்படி.
ரேவாவின் இசையில் பாடல்கள் கதைக்களத்தோடு ஒன்றியிருக்கின்றன. பின்னணி இசை தொடரின் கருத்துகளை மேம்படுத்திக் காட்ட உதவுகிறது.
ராம்ஜியின் ஒளிப்பதிவில் கிராம மக்கள் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் ஆகியன அச்சு அசலாகப் பதிவாகியிருக்கின்றன.
எழுதி இயக்கியிருக்கும் முத்துக்குமார், சமுதாயத்துக்குத் தேவையான கருத்தை சுவாரசியமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார். வசனங்கள் மிகவும் கூர்மையாக இருக்கின்றன.மையக்கருத்தைக் காட்டிலும் கதாபாத்திரங்கள் மற்றும் காட்சியமைப்புகள் முற்காலத் தமிழ்நாட்டு வாழ்வியலைச் சொல்லிச் செல்கின்றன.
ஜீ 5 இணையத்தில் எட்டு பாகங்களாக இருக்கும் இந்தத் தொடர் தமிழ்ச்சமுதாயத்தை உலகத்துக்கு அறிமுகப்படுத்தும் ஆவணமாக அமைந்துள்ளது.