காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை கால்நடையாக 4,000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்த உத்தரபிரதேச நொய்டாவைச் சேர்ந்த கௌரவ் (29) என்ற இளைஞர் நேற்று கன்னியாகுமரியை வந்தடைந்தார். கடந்த ஜூன் 26-ம் தேதி ஸ்ரீநகரில் இருந்து அவர் இந்த நடைபயணத்தை தொடங்கினார். 160 நாட்கள் தொடர்ந்து பயணித்து நாட்டின் பல்வேறு மாநிலங்கள், கிராமங்கள், குறிப்பாக ஆதிவாசிகள் வசிக்கும் பகுதிகளிலும் சென்று மக்கள் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கௌரவ் கூறுகையில், “ஆட்டோ இம்மியூன் நோய்கள், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவை இந்தியாவில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. நான் இந்த நோயால் பாதிக்கப்பட்டபோது எனது கணையம் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதையடுத்து எனக்காக தந்தையார் இயற்கை விவசாயத்தை தொடங்கினார். இதன் மூலம் உணவே பல்வேறு நோய்களின் அடிக்கண் காரணம் என்பதை உணர்ந்தேன்,” என்றார்.

தனது பயணத்தின் போது ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களை, 60,000 குழந்தைகளையும் 40,000 விவசாயிகளையும் நேரில் சந்தித்ததாக அவர் கூறினார். “நாட்டில் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் ‘ஆர்கானிக்’ என பெயர் சூட்டி பொருட்களை விற்பனை செய்கின்றன. ஆனால் இந்த 4,000 கிமீ பயணத்தில் நான் சந்தித்த உண்மையான இயற்கை விவசாயிகள் சுமார் 20 பேர் மட்டுமே. ரசாயன விவசாயம், பூச்சி மருந்துகள், கலப்படம் போன்றவை மக்கள் ஆரோக்கியத்தை தீவிரமாக பாதித்துக் கொண்டு இருக்கிறது” என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், “ஆரோக்கியமான தேசத்தை உருவாக்க வேண்டும் என்றால் மக்கள் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து பொருட்களை வாங்க வேண்டும். குழந்தைகளுக்கு ஜங்க் உணவு கொடுப்பதை பெற்றோர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். இயற்கை உணவு முறையே நம் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஒரே வழி,” என்றார்.
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்த விழிப்புணர்வு பணியின் ஒரு பகுதியாக இந்த நடைபயணத்தை மேற்கொண்டதாகவும், மக்கள் ஆரோக்கிய விழிப்புணர்வில் தொடர்ந்தும் பணியாற்றுவேன் என்றும் கௌரவ் தெரிவித்தார்.








