

மதுரையில் கண் தானம் குறித்து ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலரின் செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இன்றைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப நமது பிறப்பு, வாழ்க்கை மற்றும் மரணம் என அனைத்து சூழ்நிலைகளிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்கிறோம். அந்த வகையில் மரணத்திற்கு பிறகும் நாம் செய்யக்கூடிய ஒரு புண்ணிய காரியமாக கண் தானம் அமைந்துள்ளது.
உலகின் பார்வையிழப்பு என்னும் சுமையை மிக அதிகமான அளவில் தாங்கிக் கொண்டிருக்கும் நாடக இந்தியா திகழ்கிறது. பார்வையிழப்பிற்கு முதல் காரணம் கண் புரை, கார்னியல் பார்வைக் கோளாறுகள் மற்றும் பிறவியிலேயே பார்வை இல்லாதிருப்பது உள்ளிட்டவைகளுக்கு தற்போதைய நவீன அறிவியல் தொழில்நுட்ப சிகிச்சை கரம் நீட்டி வருகிறது.
அந்த வகையில் விபத்துகளாலோ அல்லது இயற்கை மரணத்திற்கு பிறகும் ஒருவரது கண்கள் பாதுகாக்கப்பட்டு பார்வை திறன் இழந்தவர்கள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் பார்வை பெற உறுதுணையாக இருக்கும் என்பதை அடி நாதமாக கொண்டு, மதுரை பாண்டி பஜார், பெரியார் பேருந்து நிலையம், டவுன்ஹால் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சமூக ஆர்வலர் அமுதன் ஒலிபெருக்கி கொண்டு கண் தானம் செய்ய நாம் அனைவரும் முன்வர வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை முனைப்புடன் மேற்கொண்டார். இந்தப் பிரச்சாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
