நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த மாவட்டமாகும். 55 சதவீதிதம் காடுகளை கொண்டுள்ளது. இங்கு எண்ணிலடங்கா பறவை இனங்கள் வாழ்ந்து வருகின்றன. இவைகளில் சில பறவை இனங்கள் தற்போது காண்பது அரிதாகி வருகின்றது.

குறிப்பிடும்படியாக சிட்டு குருவி இனங்கள் அழிந்து வரும் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இவைகள் அழிந்து வர முக்கிய காரணம் செல்போன் கோபுரங்களில் இருந்து வரும் கண்ணுக்கு தெரியாத கதிர் வீச்சு என சொல்லப்படுகிறது. இந்த கதிர் வீச்சால் நகரங்களில் அதிகாலை நேரங்களில் கேட்கும் இனிமையான பறவைகளின் சத்தம் கேட்பது குறைந்து வருகிறது. இருபது வருடங்களுக்கு முன் அதிகாலை வேளைகளில் நாம் கண் விழிப்பதே இந்த இனிமையான பறவைகளின் சத்தத்தில் தான் இருந்தது.
மேலும், அந்த கால கட்டங்களில் கான்க்ரீட் வீடுகள் இல்லாமல் கூரை ஓய்ந்த வீடுகள் இருந்ததால் இதை போன்ற சிறு பறவைகள் இங்கு வாழ்ந்து வந்தன.
இந்நிலையில் தற்போது வயல்வெளிகளில் இரசாயனம் கலந்த மருந்துகள் தெளிப்பதாலும், செல்போன் கோபுரங்கள் அதிகரிப்பாலும், கான்கிரீட் கட்டிடங்கள் அதிகரிப்பாலும் சிட்டுக்குருவி இனங்கள் தற்போது குறைந்து வருகிறது.

இந்நிலையில் இன்று சர்வதேச சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு தேசிய பசுமை படை சார்பில் ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் தலைமையில் உதகையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிட்டுக்குருவிகள் பாதுகாப்பது அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க தற்போது அதிகரித்து வரும் கான்கிரீட் வீடுகளில் சிட்டுக்குருவிகள் வசிக்கும் வகையில் கூரை வேய்ந்த வீடுகளாக காட்டவும், இயற்கை விவசாயத்தை நம் வீட்டுத் தோட்டத்திலிருந்து துவக்க வேண்டுமென மாணவர்களிடையே எடுத்துரைக்கப்பட்டது. மேலும் சிட்டுக்குருவிகள் பாதுகாப்பது குறித்த உறுதி மொழியும் ஏற்கப்பட்டது.
இதில் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயகுமார், மக்கள் விழிப்புணர்வு சங்கம் ஜனார்த்தனன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.