கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது.

கரூரில் முகாமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகள், சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், போலீசார், தவெக மாநில நிர்வாகிகள் மற்றும் வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
குறிப்பாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி சம்பவம் தொடர்பாகவும், இறந்தவர்கள் தொடர்பாகவும், அவர்கள் கூறிய கருத்துக்களை கேட்டு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் சிபிஐ விசாரணையை கண்காணிக்கும் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான சிறப்பு குழு இன்று கரூர் வரவுள்ளது. இந்நிலையில் சிபிஐ டிஐஜி அதுல் குமார் தாகூர் கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு இன்று காலை வருகை தந்தார்.

மேலும், இந்த வழக்கில் சிபிஐ இதுவரை விசாரணை செய்த தரவுகளை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் பகுதிக்கு அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். சிபிஐ அதிகாரிகள் நடந்த சம்பவம் குறித்து டிஐஜி இடம் விளக்கம் அளித்து வருகின்றனர்.








