

மதுரை, தனக்கன்குளத்தில் சாலை ஓரம் நின்றிருந்த லாரி திடீரென திரும்பியதால் இருசக்கர வாகனம் லாரி மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.
மதுரை, திருமங்கலத்தில் உள்ள சவுக்கத் அலி தெருவில் காதர் பாஷா மகன் நாகூர் கனி (40) வசித்து வருகிறார். நேற்று நாகூர் கனி அவரது பணிகளை முடித்துவிட்டு 4.00 மணி அளவில் திருநகரில் இருந்து திருமங்கலத்தில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக அவரது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
இந்த நிலையில் திருநகரில் உள்ள தனக்கன்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது நின்று கொண்டிருந்த லாரியை ஓட்டுனர் இயக்க முயன்ற போது மோதியதில் நாகூர் கனி ரோட்டில் சரிந்து கீழே விழுந்தார்.
இந்த விபத்தைக் கண்ட தனக்கன்குளம் பகுதி பொதுமக்கள் தலையில் அடிபட்டிருந்த நாகூர் கனியை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இத்தகவல் அறிந்து விரைந்து வந்த திருநகர் காவல்துறையினர் லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகூர் கனி மீது லாரி மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
