• Sat. May 4th, 2024

ஆருத்ரா தரிசன விழா : கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!

Byவிஷா

Dec 27, 2023

இன்று ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் திருவாதிரை நாளில் ஆருத்ரா தரிசனம் சிவ ஆலயங்களில் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று சிதம்பரம் நடராஜர் கோயில் ஆரூத்ரா தரிசன விழா தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து மனமுருக சாமி தரிசனம் செய்தனர். நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகளும், தனித்தனி தேர்களில் வீதிஉலா வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்துள்ளனர்.
சிவபெருமானின் தலைமைப் பீடமாகத் திகழ்வது சிதம்பரம் நடராஜர் ஆலயம். உலகம் முழுவதும் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் இரவு அர்த்த சாம பூஜை நடந்தேறுவது வழக்கம். ஆனால் சிதம்பரத்தில் மட்டும், தினமும் இரவு 10 மணிக்குத் தான் அர்த்தசாம பூஜை நடைபெறும். அதன்படி அனைத்து சிவாலயங்களிலும் உள்ள இறைத் திருமேனிகள் தங்களின் தலைமைப் பீடமாகத் திகழும் சிதம்பரம் நடராஜரைத் தரிசிக்க தினமும் வருவதாக ஐதீகம். எல்லாக் கோயில்களிலும் கருவறையில் வீற்றிருக்கும் இறைவன் குடி இங்கு மட்டும் சித்சபையில் கொலுவிருக்கிறார். மூலவரே வீதி உலா வருவது இங்கு மட்டும் தான்.
திருச்சிற்றம்பலத்தின் முன்புறம் கனகசபை அமைந்துள்ளது. பக்தர்கள், இங்கிருந்தே நடராஜப் பெருமானை வணங்கலாம். இதில் 9 வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன. சித்ரசபையின் உள்ளே இறைவன் அருவம், உருவம், அருவுருவம் எனும் 3 நிலைகளில் எழுந்தருளியுள்ளான். சிதம்பர ரகசியம் அருவம், ஆனந்த நடராஜர் உருவம், ஸ்படிகலிங்கம் அருவுருவம். நாளை மார்கழித் திருவாதிரையில் நடராஜரை சிந்தையில் நிறுத்தி வணங்கினால் ஞானமும் தெளிவும் கிடைப்பது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *