• Fri. May 3rd, 2024

ஜல்லிக்கட்டு கலையரங்கத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்ட எதிர்ப்பு..,எச்சரிக்கை விடுக்கும் நாம் தமிழர் கட்சி..!

Byகுமார்

Jan 9, 2024

மதுரையில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு கலையரங்கத்திற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை வைத்தால், மீண்டும் மெரினா போராட்டம் வெடிக்கும் என நாம் தமிழர் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு இடம் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 13ஆம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டுமான பணி தொடங்கப்பட்டது. இந்த மைதானம் 66 ஏக்கர் நிலத்தில் சுமார் 16 ஏக்கரில் அமைக்கப்பட்டு தற்போது பணிகள் முடிவடைந்துள்ளது வரும் 23 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் கீழக்கரை ஜல்லிக்கட்டு கலையரங்கம் கட்ட தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து சர்ச்சை எழுந்துவண்ணமே இருந்துவருகிறது.
கலையரங்கத்திற்கு சின்ன இலந்தைகுளம் முதல் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானம்வரை 22 கோடி மதிப்பில் சாலை அமைப்பதற்காக விவசாய நிலங்கள் மற்றும் பல்வேறு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் அவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை இன்னும் பல நபர்களுக்கு வழங்கப்படாத நிலையில் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
நிலத்தை எடுத்து ஒரு மாதத்தில் பணம் தருவதாக கூறி அப்பகுதி மக்களை ஏமாறறி சாலைகளை அமைத்து திறப்பு விழாவிற்கு தயாராகியுள்ளனர். ஆனால் நம்பி நிலத்தை கொடுத்தவர்கள் தவித்துநிற்கின்றனர். இதனிடையே ஜல்லிக்கட்டு கலையரங்கத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் பொறித்த மிகப்பெரிய அளவிலான பெயர்பலகை கொண்டுவரப்பட்டு பதிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயரை ஒட்டுவதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்துவருகின்றனர். அதன்படி மக்களின் வரிப்பணத்தில் கட்டும் இது போன்ற பாரம்பரிய விளையாட்டு கலையரங்கத்திற்கு வாடிவாசல் என்றோ, பாண்டியன் நெடுஞ்செழியன் அரங்கம் எனவோ பெயர் சூட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.
இதனை மீறியும் ஜல்லிக்கட்டு கலையரங்கத்திற்கு கருணாநிதி பெயரை சூட்டினால் மீண்டும் மெரினா புரட்சி போராட்டம் வெடிக்கும் என நாம் தமிழர் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்று தமிழ்தேசிய கட்சியினரும் கருணாநிதியின் பெயரை சூட்டக்கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *