நடிகர் சோனு சூட்டை 10-ம் தேதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்டட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் சோனுசூட்,. இவர் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக பஞ்சாப் மாநிலம் லுதியானாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ் கண்ணா வழக்குத் தொடுத்திருந்தார். அதில், “மோஹித் சுலா என்பர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யும்படி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அதன் அடிப்படையில், ரூ.10 லட்சம் முதலீடு செய்யப்பட்டது. அதன்பிறகுதான் அது போலி கிரிப்டோ கரன்சி என்பது தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய நடிகர் சோனு சூட் உள்ளிட்டவர்களிடம் விசாரிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அதன் அடிப்படையில், விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் நடிகர் சோனுசூட்டுக்கு பலமுறை சம்மன் அனுப்பியிருக்கிறது.
ஆனால், நடிகர் சோனுசூட் பதிலளிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. அதற்கும் அவர் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை. இந்த நிலையில், நீதிபதி ராமன்பிரீத் கவுர், “இத்தனைமுறை சம்மன் அனுப்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகாத நடிகர் சோனுசூட் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். வரும் 10-ம் தேதிக்குள் அவரை கைது செய்ய வேண்டும். அப்படி கைது செய்யப்படவில்லையென்றால், நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும்படியான காரணத்தை காவல்துறை நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும்” என மும்பையின் ஓஷிவாரா காவல் நிலையத்துக்கு கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருக்கிறார். நடிகர் சோனு சூட்டுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.