• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகள் கடத்தி விற்கப்படுகிறதா?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகள் கடத்தி விற்கப்படுகிறதா? என்று மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு சீன துறைமுகமான நிங்பேவில் இருந்து கன்டெய்னர்கள் ஏற்றப்பட்ட கப்பல் வந்தது.

அதில், தூத்துக்குடிையச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு வந்த 2 கன்டெய்னர்களில் என்ஜினீயரிங் உபகரணங்கள், சிறிய தட்டையான டிராலிகள் இருப்பதாக ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவற்றின் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அந்த கன்டெய்னர்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திறந்து சோதனையிட்டனர். அந்த கன்டெய்னர்களில் சிலிக்கன் சீலென்ட்கன் எனப்படும் தகரம், பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் ஒட்டுவதற்கு பயன்படும் உபகரணங்களும், அதற்கான சிலிக்கான் பசை போன்ற பொருட்களும் இருந்தன.

மேலும் அவற்றுக்கு பின்னே 8,400 அட்டைப் பெட்டிகளில் சீன பட்டாசுகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 கோடி ஆகும். கன்டெய்னர்களில் இருந்த பொருட்களுடன் சீன பட்டாசுகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சீன பட்டாசுகளை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. 

தொழில் அதிபர்கள் சிலர் என்ஜினீயரிங் பொருட்கள் பெயரில் ஆவணம் தயாரித்து, சீன பட்டாசுகளை கன்டெய்னர்களில் கடத்தி வந்தது தெரியவந்தது. தொழில் அதிபர்கள் சிலர் என்ஜினீயரிங் பொருட்கள் பெயரில் ஆவணம் தயாரித்து, சீன பட்டாசுகளை கன்டெய்னர்களில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த மைக்கேல் ஜேக்கப் ஜெயசேகரன், சூசை மாணிக்கம் ஜெயேந்திரன், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர்கள் விகாஷ் பட்டேஷ்வர் தவுபி, தசரத் மச்சீந்தரா கோக்கரே ஆகிய 4 பேரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

கைதான 4 பேரையும் தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ரூ.7 கோடி பொம்மைகள்

இதேபோன்று சீன துறைமுகமான நிங்போவில் இருந்து தூத்துக்குடிக்கு மற்றொரு கப்பலில் கன்டெய்னர்கள் வந்தன. அதில், பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு வந்த 4 கன்டெய்னர்களில் ெஹல்மெட், விளையாட்டு உபகரணங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில் சந்தேகமடைந்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், அந்த கன்டெய்னர்களை திறந்து சோதனை செய்தனர்.

அதில், சட்ட விரோதமாக சீனாவில் இருந்து விளையாட்டு பொம்மைகள் மற்றும் ஷூக்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இவற்றினை இந்தியாவிற்குள் கொண்டு வர தரச்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த பொருட்கள் அனைத்தும் தரமற்றவை என்பதால் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.

இவற்றின் மொத்த மதிப்பு ரூ.7 கோடியாகும். இதனை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த சிலரை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வலைவீசி தேடி வருகின்றனர்.”