• Mon. Apr 29th, 2024

அரைச்ச சந்தனம், தண்டட்டி கருப்பாயி வரிசையில், “அடி ஆத்தி” பாடல்! பாடலாசிரியர் முருகன் மந்திரம் மகிழ்ச்சி.

Byஜெ.துரை

Feb 26, 2024

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் சைரன்.

இந்தப் படத்தில் பாடலாசிரியர் முருகன் மந்திரம் எழுதிய, “அடி ஆத்தி” பாடல் ஹிட் பாடலாக மாறி இருக்கிறது.

இது பற்றி பாடலாசிரியர் முருகன் மந்திரம் கூறுகையில்,

ரொம்ப சந்தோஷமா இருக்கு. சைரன் படத்தின் இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் சார், இந்தப் பாடலுக்கான சூழலை என்னிடம் சொல்லும் போதே, இது தமிழ் மக்களின் குடும்பப் பாடலாக மாறும்ணு தோணிச்சு. அதுவும் ஜீவி பிரகாஷ் ட்யூன் கேட்ட உடனே கண்டிப்பா ஹிட் தான்னு நெனைச்சேன். நெனைச்ச மாதிரியே பெரிய அளவில் பாடல் மக்களிடம் போய்ச் சேர்ந்திருக்கிறது.

பூப்பெய்துதல் என்பது பெண்களின் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான விஷயம். அது ஒரு இயற்கை மாற்றம், வளர்ச்சி. அப்படி பெண்கள் வயதுக்கு வருவதை சொந்த பந்தங்கள் கூடி சந்தோஷமாகக் கொண்டாடுவது தமிழ் மக்களின் பண்பாட்டு வழக்கமாக இருக்கிறது. அந்தக் கொண்டாட்டத்திற்காக உருவானது தான் அடி ஆத்தி பாடல்.

சின்ன மொட்டு ஒண்ணு
பூத்து இப்போ
வெட்கப்படும் ஜோரு
வண்ணப் பொட்டு வச்சி
பூவும் வச்சி நிக்கிறதைப் பாரு
கூடி வாங்க பொண்ணுகளே
கொலவையை போட்டு ஆடுங்க
மாடி வீடு கட்டித் தரும்
மாப்பிள்ளை வேணும் தேடுங்க

இப்டி அழகான தொகையறாவுல தொடங்குற பாடல், அடுத்து வரும் பல்லவில கொண்டாட்டத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு போவும்., அங்கே இருந்து சரணம்… அது இன்னும் அடுத்த லெவலுக்குப் போகும்… மொத்தத்துல பாட்டு வரிகளும் இசையும் மகிழ்ச்சி உற்சாகம் கொண்டாட்டம்னு கலகலப்பா இருக்கும். அதான் இவ்ளோ பெரிய ஹிட் ஆகக் காரணம்.

பெண்கள் வயதுக்கு வரும் நிகழ்வுகளில் ஒலிக்கிற பாடல்களாக, “சின்னத் தம்பி” படத்தில் இடம் பெற்ற “அரைச்ச சந்தணம் மணக்கும் குங்குமம்” பாடலும், “காதல்” படத்தில் இடம் பெற்ற “தண்டட்டி கருப்பாயி” பாடலும் நிச்சயமா இருக்கும். இப்போ அந்த வரிசையில் “அடி ஆத்தி” பாடலும் சேர்ந்திருக்கு. அதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். தமிழ் மக்கள் தினமும் கேட்கிற பாடலாக என் பாடல் இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

ஜெயம் ரவி சார், அந்தோணி பாக்யராஜ் சார், ஜீவி பிரகாஷ்குமார் சார், தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் மேடம், இந்தப் பாடல் வாய்ப்புக்கு காரணமான அந்தோணி தாசன் அண்ணா, இந்தப் பாடலை பாடிய சிந்தூரி விஷால், அந்தோணிதாசன் அண்ணா, முகேஷ் அனைவருக்கும் பாடல் வெளியான உடனே கேட்டு ரசித்து உலகெங்கும் இருந்து பாராட்டிய நண்பர்கள், உறவினர்கள், ரசிகர்கள், விமர்சனத்தில் குறிப்பிட்டு பாராட்டிய ஊடக தோழமைகள் அனைவருக்கும் என் அன்பின் நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார், முருகன் மந்திரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *