• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஏப்ரல் 14, அம்பேத்கர் பிறந்த நாள் இனி சமத்துவ நாள்: முதலமைச்சர் அறிவிப்பு

அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உரையாற்றிய முதலமைச்ச்ர் மு.க.ஸ்டாலின்,” அண்ணல் அம்பேத்கர் வடக்கில் உதித்த சூரியன். பலர் வாழ்வில் கிழக்காக இருந்த பகலவன். சமூகம் ஏற்படுத்திய ஏற்றத்தாழ்வை, கல்வி, சட்டம், அரசியல் எழுச்சி மூலம் சமப்படுத்திய போராளி. சாதிக்கொடுமையால் இருண்ட உலகத்தை தனது பரந்த அறிவால், ஞானத்தால் விடியவைத்த விடிவெள்ளி அம்பேத்கர்.

அவர் வேண்டாததை நீக்கிய சிற்பி, வேண்டியதை சேர்த்த ஓவியம். அம்பேத்கரின் கருத்துகள் ஆழம் கொண்டவை. நேற்று மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில், பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்ததை போல், அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14ஐ சமத்துவ நாளாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கையை ஏற்று, ஏப்ரல் 14ம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும், சமத்துவ நாள் உறுதிமொழி தமிழகம் முழுவதும் எடுத்துகொள்ளப்படும். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கையை ஏற்று அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் . அம்பேத்கர் நூல்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.