ஜிஎஸ்டி 2.0 வரி சீராய்வு மற்றும் வரிக்குறைப்பு நடவடிக்கைக்காக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள பி எஸ் ஜி கன்வென்ஷன் சென்டர் அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரம ராஜா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மத்திய நிதி அமைச்சருக்கு வரிக்குறைப்பு நடவடிக்கைக்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய வணிகர் சங்கப் பிரதிநிதிகள், ஜிஎஸ்டி வரி விதிப்பினை இரண்டு பிரிவுகளாக குறைத்ததற்கு நன்றி தெரிவித்ததோடு, ஜிஎஸ்டி குறைப்பு நடைமுறை பண்டிகை காலங்களில் வணிகர்களுக்கு பெரும் பொருளாதாரத்தை ஈட்டி தந்ததாக கூறினர்.மேலும், ஜிஎஸ்டி இரண்டு வித வரி விதிப்பினை ஒன்றாக மாற்ற வேண்டும் எனவும், சிறு விவசாயிகளுக்கான பென்ஷன் திட்டத்தை போல சிறு வணிகர்களுக்கும் பென்சன் திட்டம் வழங்க வேண்டும் எனவும், வரிவிதிப்புக்கான அபராதம் விதிப்பு மற்றும் பதிவு செய்யும் முறைகளை எளிதாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட 33 அம்ச கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுவினையும் மத்திய நிதியமைச்சரிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து நிகழ்வில் சிறப்புரையாற்றிய மத்திய நிதி அமைச்சர், ஜி எஸ் டி வரிக்குறைப்பு நடவடிக்கைக்கு வழங்கும் பாராட்டுகள் அனைத்தும் பிரதமரையே சென்று சேரும் எனவும், செப்டம்பர் முதல் அக்டோபர் வரை ஆறு லட்சம் கோடி அளவிற்கு நாட்டில் மக்கள் செலவு செய்துள்ளதாகவும், இது வணிகர்களுக்கு நேரடியாக பயனை தந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். வரிக்குறைப்பு நடவடிக்கையால் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்ததோடு, வணிகர்களின் வருவாய் உயர்ந்தது, அதனால் தொழில் வளர்ந்ததோடு வேலை வாய்ப்பு அதிகரித்து மீண்டும் வாங்கும் திறனை அதிகரித்துள்ளது.
குறிப்பாக வரி குறைப்பு நடவடிக்கையால் ஆட்டோமொபைல் துறை, இன்சூரன்ஸ் துறை மற்றும் டிவி ஏசி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் விற்பனை துறை ஆகியவை வளர்ச்சி அடைந்துள்ளதாகவும்.ஜிஎஸ்டி பதிவு நடைமுறை மற்றும் வருமான வரி தாக்கல் செய்யும் நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய நிதி அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக இன்று காலை முதலிபாளையம் பகுதியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் அணி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்திலும் அவர் கலந்து கொண்டு பேசினார்.











; ?>)
; ?>)
; ?>)