டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் மீண்டும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் பணம் நிரப்பப்பட்ட சாக்குகள் இருந்ததாக டெல்லி போலீஸ் மற்றும் தீயணைப்பு படை அதிகாரிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கடந்த ஹோலி தினத்தன்று நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் பண்ணை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க வந்த தீயணைப்பு படை அதிகாரிகள் ஒரு அறையில் சாக்குகளில் கோடிக்கணக்கான ரூபாய் ரூபாய் கண்டதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் தானோ அல்லது தனது குடும்ப உறுப்பினர்களோ சேமிப்பு பணத்தை வைத்திருக்கவில்லை என்றும், தனக்கு எதிராக ஒரு சதித்திட்டம் தீட்டப்படுவதாகவும் நீதிபதி யஷ்வந்த் வர்மா கூறினார்.
இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் இருந்து தீயணைப்பு படை பணம் எதையும் கண்டுபிடிக்கவில்லை என்றும், 15 நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டது, தளவாடப் பொருட்கள் தான் தீப்பிடித்தது என்றும் தீயணைப்பு படை தலைவர் அதுல் கார்க் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது திடீர் திருப்பமாக நீதிபதியின் வீட்டில் பணம் இருந்தது என்று போலீஸ் மற்றும் தீயணைப்பு படை அதிகாரிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதற்கிடையே, பணம் கண்டுபிடிக்கப்பட்டும் ஏன் பறிமுதல் செய்யப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் நியமித்த குழு கேட்டபோது, வழக்கு இல்லாததால் பறிமுதல் செய்ய முடியவில்லை என்று டெல்லி போலீஸ் கமிஷனர் பதிலளித்துள்ளார்.