• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருமலை திருப்பதி கோயில்களில் வருடாந்திர பிரம்மோற்சவம்

Byகாயத்ரி

Dec 10, 2021

திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில்களில் வருடாந்திர பிரம்மோற்சவம் முடிந்த பின், மலர்களால் புஷ்பயாகம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நவம்பர் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்த வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் பஞ்சமி தீர்த்தத்துடன் நிறைவடைந்தது.

பிரம்மோற்சவத்தின்போது அர்ச்சகர்கள், பக்தர்கள், ஊழியர்களால் தெரிந்தோ தெரியாமலோ ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரமாக புஷ்பயாகம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி, காலை பத்மாவதி தாயாருக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

இதையடுத்து தேவஸ்தான தோட்டத் துறை துணை இயக்குனர் சீனிவாசலு தலைமையில் பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட மலர்கள், ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க ஆஸ்தான மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர், யாகம் செய்யப்பட்டு தாயாருக்கு புஷ்ப யாகம் விமரிசையாக நடைபெற்றது.

இதில், ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி, சாமந்தி, தேன் பூக்கள், தாமரை, அல்லி, தாழம்பூ உள்ளிட்ட மலர்களாலும், மருவு, மரிக்கொழுந்து, தவனம், வில்வம், துளசி உள்ளிட்ட பத்ரங்களாலும் (இலைகள்) தாயாருக்கு யாகத்தை நடத்தினர். இதற்கான மலர்கள் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து பக்தர்களிடம் இருந்து வரவழைக்கப்பட்டன.